இணையப் போக்கு, அதன் வழி வரும் பிரச்சினைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று கல்வி அமைச்சின் வழிகாட்டுதல் பிரிவைச் சேர்ந்த தலைமைப் பள்ளி ஆலோசகரான திருவாட்டி ஜேன் லிம் வலியுறுத்தியுள்ளார்.
இணையம் மூலம் துன்புறுத்தல்கள் குறித்து ஏதேனும் முக்கியமான விவகாரங்கள் எழுந்தால் அதகுறித்து ஆசிரியர்களிடம் மாணவர்கள் உடனடியாகத் தெரிவிப்பதன் மூலம் பங்களிக்கலாம் என்றார் அவர்.
சமூக ஊடகம் அல்லது தகவல் செயலிகள் மூலம் மனதைப் புண்படுத்தும் கருத்துகளைச் சில மாணவர்கள் பதிவிடக்கூடும் அல்லது மற்றவர்களைப் போல பாசாங்கு செய்து போலி சமூக வலைத்தளப் பக்கங்களை அவர்கள் உருவாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மாணவர்கள் சிலரை சக மாணவர்கள் துன்புறுத்தியது பெரிதும் பேசப்பட்டது.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வி அமைச்சு பதிலளித்தது.
துன்புறுத்தல் புகார்கள் செய்யப்பட்டால் அவற்றைப் பள்ளிகள் கையாளும் விதம் அத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சு விவரித்தது.
கடந்த செப்டம்பர் மாதம், பள்ளித் துன்புறுத்தல் தொடர்பாக இரண்டு காணொளிகள் இணையத்தில் வலம் வந்தன.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் சக மாணவர்களை அடித்துத் துன்புறுத்துவதை அக்காணொளிகள் காட்டின.
தொடர்புடைய செய்திகள்
“சக மாணவர்களைத் துன்புறுத்துவது ஏற்றுக்கொள்ளப்படாது. அத்தகைய செயல்களுக்குச் சிங்கப்பூர் பள்ளிகளில் இடமில்லை,” என்று அமைச்சு கூறியது.
“சக மாணவர்களுக்கு மரியாதை கொடுப்பது, பரிவு காட்டுவது போன்ற நன்னெறிகள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. அப்படியே யாராவது துன்புறுத்தினால் அங்கிருந்து உடனடியாகக் கிளம்பிச் சென்று நம்பகத்தன்மையுடைய பெரியோரிடம் தெரிவிக்க வேண்டும் என்று மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுகிறது.
இணையம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ துன்புறுத்தப்படும் மாணவர்களை அடையாளம் காண சில அறிகுறிகள் இருப்பதாக சிங்கப்பூர சிறார் மன்றத்தின் மாணவர் சேவைப் பிரிவுத் துணை இயக்குநரும் தலைவருமான திருவாட்டி கிலோரியா இங் தெரிவித்தார்.
தலை வலிக்கிறது, வயிறு வலிக்கிறது போன்ற சாக்குப்போக்குகளை அத்தகைய மாணவர்கள் அடிக்கடி கூறுவர் என்றார் அவர்.
தூக்கமின்மை, சாப்பிட விருப்பமில்லாத நிலை, தூங்கும்போது மெத்தையில் சிறுநீர் கழிப்பது, அடிக்கடி எரிச்சல் அடைவது போன்ற பிரச்சினைகளும் எழக்கூடும் என்றார் அவர்.

