செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பாதிரியார் தாக்கப்பட்டதற்கு சிங்கப்பூரில் உள்ள சமய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
வழிபாட்டு இடங்களில் வன்முறை சகித்துக்கொள்ளப்படாது என்று அவை எடுத்துரைத்தன.
சனிக்கிழமையன்று (நவம்பர் 9) செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பாதிரியார் கிறிஸ்டஃபர் லீ கத்திக்குத்துக்கு ஆளானர். சந்தேக நபரான சிங்கப்பூரைச் சேர்ந்த 37 வயது சிங்கள ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து வழிபாட்டு இடங்களில் வன்முறை சகித்துக்கொள்ளப்படாது என்று 10 சமயங்களைப் பிரதிநிதிக்கும் சமயங்களுக்கு இடையிலான அமைப்பு (ஐஆர்ஓ) கண்டனம் தெரிவித்தது. அந்த அமைப்பு, கிறிஸ்துவ, இந்து, இஸ்லாமிய, யூத, சீக்கிய, தாவோயிஸ்ட், ஸொரொவேஸ்திரிய, பெளத்த, பாஹாய் ஆகிய சமயங்களைப் பிரதிநிதிக்கிறது.
சம்பவம் தங்களுக்கு மிகுந்த வருத்தம் தருவதாகவும் நமது சமூகத்தில், குறிப்பாக அமைதி தரும் புனிதமான இடங்களில் வன்முறைக்கு இடம் கிடையாது என்று இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை மன்றமும் செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டன.
சிங்கப்பூரின் இஸ்லாமிய சமயத் தலைவரான டாக்டர் நஸிருதின் முகம்மது நாசர், சிங்கப்பூரின் எல்லா வழிபாட்டு இடங்களின் புனிதத்தையும் பாதுகாப்பையும் காப்பதுடன் ஒவ்வொரு சமயமும் போதிக்கும் அமைதிக் கல்வியை வலியுறுத்துவதில் கத்தோலிக்க மற்றும் அனைத்து சமயத்தினருடனும் தாங்கள் ஒன்றுபட்டு நிற்பதாக இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.
இந்த சவாலான நேரத்தில் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுடன் தாங்கள் ஒன்றுபட்டு நிற்பதாகவும் சீக்கிய ஆலோசனை மன்றம் சொன்னது.
தாக்குதல் நம்ப முடியாத கொடூரமான ஒன்று என்று சிங்கப்பூர் பெளத்த சம்மேளனம் வருத்தம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
தாவோயிஸ்ட் சமயத்தைப் பிரதிநிதிக்கும் ‘குவான் சென் கல்ச்சுரல் சொசைட்டி’ சங்கம் (Quan Zhen Cultural Society), கத்தோலிக்க தேவாலயத்தின் உறுப்பினர்களுடன் தாங்கள் ஒன்றுபட்டு நிற்பதாக ஃபேஸ்புக்கில் கூறியது.
சிங்கப்பூர் திருச்சபைகளின் தேசிய மன்றம் ஏபிசிசிஎஸ் (National Council of Churches of Singapore), சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை எண்ணி நிம்மதி அடைவதாகக் கூறியது.
பாதிரியார் கிறிஸ்டஃபர் விரைவில் குணமடைவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சமய அமைப்புகள் தெரிவித்தன.