பயங்கரவாதத் தாக்குதல்: தயார்நிலையில் சமய அமைப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள்

2 mins read
உள்துறைத் துணையமைச்சர் சுன் ஷுவெலிங் நாடாளுமன்றத்தில் தகவல்
3b66b872-cbea-4b3b-a58b-147282c2113a
2024ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி, 37 வயது ஆடவர் ஒருவர் செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றபோது பாதிரியாரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பள்ளிகள், மருத்துவமனைகள், சமய அமைப்புகள் ஆகியவை பாதுகாப்பு மிரட்டல்களையும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் செயல்முறைகளைத் தயார்நிலையில் வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

உள்துறைத் துணையமைச்சர் சுன் ஷுவெலிங், பிப்ரவரி 26ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தாக்குதல்களைத் தவிர்த்தல், அடையாளம் காணுதல், அவற்றை எதிர்கொள்ளுதல் ஆகியவை தொடர்பில் உள்துறை அமைச்சு அந்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதாக அவர் கூறினார்.

பள்ளிகளில் நெருக்கடிநேரத் தயார்நிலை தொடர்பில் கல்வி அமைச்சுடன் இணைந்து உள்துறை அமைச்சு பணியாற்றுவதாகத் துணையமைச்சர் சொன்னார்.

நெருக்கடியைக் கையாள்வதற்கும் அதிலிருந்து மீள்வதற்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கு உதவும் செயல்முறைகளை அனைத்துப் பள்ளிகளும் கொண்டுள்ளன என்றார் அவர்.

வருடாந்தர பாவனை முடக்கப் பயிற்சி மட்டுமன்றி காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றுடன் இணைந்து சிறப்புப் பயிற்சிகளையும் பள்ளிகள் நடத்துவதாகத் திருவாட்டி சுன் கூறினார்.

ஹாலந்து - புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டஃபர் டிசூசா, வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் ஓங் இருவரும் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

பாதுகாப்பு மிரட்டல்களைக் கையாள்வது தொடர்பில் பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்களை உள்துறை அமைச்சு எவ்வாறு தயார்ப்படுத்துகிறது என்று அவர்கள் கேட்டனர்.

ஆறு மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக வழிபாட்டுத் தலமொன்றில் தாக்குதல் நடைபெற்ற நிலையில் அமைச்சின் முயற்சிகள் குறித்தும் திரு டிசூசா கேள்வி எழுப்பினார்.

2024ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் 37 வயது ஆடவர் பாதிரியாரைக் கத்தியால் குத்தினார்.

இந்த மாதம் (2025 பிப்ரவரி) 9ஆம் தேதி அப்பர் தாம்சனில் உள்ள ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்தில் 22 வயது ஆடவர் பாதிரியாரைத் தாக்கியதாகக் கூறப்பட்டது.

சமய அமைப்புகள், பாதுகாப்பு சுயமதிப்பீட்டு நடவடிக்கைகள், பயங்கரவாத எதிர்ப்புக் கருத்தரங்குகள் போன்றவற்றில் பங்குகொண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பயங்கரவாதம் ஆகியவை குறித்து மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதாகவும் திருவாட்டி சுன் கூறினார்.

கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சின் சமய அமைப்புகளுக்கான நெருக்கடி நேரத் தயார்நிலைத் திட்டத்தின்கீழ், சமயக் குழுக்கள் அவற்றின் நெருக்கடி நேரத் தயார்நிலையை மதிப்பீடு செய்யவும் அவற்றின் உறுப்பினர்களுக்கு முதலுதவித் திறன் பயிற்சி அளிக்கவும் நெருக்கடியைக் கையாள்வதற்கான விரிவான திட்டத்தை வரையவும் கற்றுக்கொள்கின்றன.

பொது மருத்துவமனைகள் வழக்கமான இடைவெளியில் காவல்துறையுடனும் குடிமைத் தற்காப்புப் படையுடனும் இணைந்து, தயார்நிலைப் பயிற்சிகளை நடத்துகின்றன.

சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் அனைத்திலும் பாதுகாப்புத் தரநிலைகளைச் சுகாதார அமைச்சு ஒருங்கிணைத்துள்ளது என்றார் திருவாட்டி சுன்.

மேலும், பாதுகாப்பு மிரட்டல் அதிகரிக்கும் சூழலில் காவல்துறை கூடுதலான சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.

உடலளவிலும் மனத்தளவிலும் பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள சமூகம் தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்