உலக விவகாரங்கள் தொடர்பிலும் சமய போதகர்கள் வழிகாட்டுவர்: ஃபைஷால் இப்ராஹிம்

உலக விவகாரங்கள் தொடர்பிலும் சமய போதகர்கள் வழிகாட்டுவர்: ஃபைஷால் இப்ராஹிம்

2 mins read
e405aefe-ae58-4e19-a71b-769c8fed86c9
புதுப்பிக்கப்பட்ட ஹாஜி முஹம்மது சாலே பள்ளிவாசலுக்கு முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் வருகைபுரிந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல இன, சமயத்தவர் வாழும் சிங்கப்பூரில் மக்கள், அனைத்துலகப் பூசல்கள் உள்ளிட்ட நடப்புகளுடன் உணர்வுபூர்வமாகத் தங்களை இணைத்துக்கொள்கின்றனர்.

உலக நடப்புகளைப் பற்றிய மேம்பட்ட புரிதலை உருவாக்குவதும் அவற்றின் விளைவுகளைச் சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் விளக்குவதும் சிங்கப்பூரின் அணுகுமுறையாக இருப்பதாக உள்துறைக்கான மூத்த துணை அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்லினா அப்துல் ஹலிம் முன்வைத்த வினாக்களுக்குப் பதில் அளித்தபோது இணைப் பேராசிரியர் ஃபைஷால், அத்தகைய தகவல்களை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிக்கைவழி வெளியிட்டுப் பகிரும் எனக் கூறினார்.

இந்த விவகாரங்கள் பற்றிய நிதானமான கலந்துரையாடல்களுக்கு இடமளித்து, ஆக்கபூர்வமான முறையில் சிங்கப்பூரர்களைப் பங்களிக்க வைப்பது முக்கியம் என்றார் அவர்.

இன, சமயங்களுக்கு இடையே ஒற்றுமையை வலுப்படுத்த ‘ஹார்மனி சர்க்கல்’ (Harmony Circle) நல்லிணக்க அமைப்பு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மின்னிலக்கக் காலகட்டத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும்படி இளையர்களை ஊக்குவிக்கும் கருத்தரங்கு இவ்வாண்டுத் தொடக்கத்தில் நடத்தப்பட்டதையும் சுட்டினார்.

முயிஸ் (MUIS) எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் நிறுவியுள்ள ரஹ்மத்தான் லில் ஆலமின் அறநிறுவனம், காஸா விவகாரத்திற்காகச் சிங்கப்பூரர்கள் உதவி செய்வதற்குத் தளம் அமைத்துத் தருவதையும் டாக்டர் ஃபைஷால் குறிப்பிட்டார்.

இந்த விவகாரங்களைப் பற்றிப் பேசவும் கலந்துரையாடவும் விரும்புவோர் ‘அசாட்டிஸா’ எனப்படும் சமய போதகர்களை அணுகலாம் என்று அவர் கூறினார்.

“தனிமனித்அர்களும் குடும்பங்களும் மனம், ஆன்மிகம் சார்ந்த ஆதரவை நாடுவதற்கு அசாட்டிஸா ஆறுதலளிக்கும் பராமரிப்பு (Asatizah Solace Care) எனும் சேவையை நாடலாம்,” என்றும் டாக்டர் ஃஃபைஷால் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்