தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுதந்திர சிங்கப்பூரின் முதல் மில்லியன் குடிமக்களை நினைவுகூரும் முயற்சி

3 mins read
10b239f1-5a2e-4f2b-8bf5-6773c9e23a6d
சுதந்திர சிங்கப்பூரின் முதல் தலைமுறையைச் சேர்ந்த ஏறத்தாழ 200 பேரின் கதைகளை எடுத்துரைக்கும் விதமாகச் சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகத்தின் ‘குடிமக்கள் திட்டப்பணி – ஒரு மில்லியன்’ திட்டம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற்ற உறவினரின் திருமணத்துக்குப் பிறகு திருமண வீட்டிலேயே குடும்பத்தினருடன் தங்கியிருந்த திலீப் நாயர், மறுநாள் காலை 10 மணிக்கு, சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடானது குறித்த அறிவிப்பைக் கேட்டார்.

அப்போது, அவருக்கு வயது 15.

“அந்த நேரத்தில், என் கல்வியை முடிப்பதும், மீண்டும் எந்தக் கலவரமும் ஏற்படக்கூடாது என்பதும் என் முக்கியக் கவலைகளாக இருந்தன,” என்றார் திரு நாயர்.

சிங்கப்பூர் அக்காலத்தில் எதிர்கொண்ட சவால்கள் காரணமாக அவரது தந்தையின் சக ஊழியர்கள் பலர் இங்கிலாந்துக்குச் சென்றதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

ஆனால் இந்தியாவிலிருந்து குடியேறிய அவரது பெற்றோர் தொடர்ந்து சிங்கப்பூரிலேயே தங்கியிருக்க முடிவெடுத்தார்கள்.

“சிங்கப்பூரில் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் எடுத்த முடிவுக்கு நான் இன்று மிகவும் நன்றியுடன் உள்ளேன்,” என்றார் திரு நாயர்.

சுதந்திரம் பெற்ற சிங்கப்பூரின் முதல் ஒரு மில்லியன் குடிமக்களில் ஒருவரான திரு நாயரின் கதை சுதந்திர சிங்கப்பூரின் முதல் தலைமுறையினரின் கதைகளில் ஒன்றாகும்.

ஏறத்தாழ 200 மூத்தோரின் கதைகளை எடுத்துரைக்கும் விதமாகச் சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகத்தின் ‘குடிமக்கள் திட்டப்பணி – ஒரு மில்லியன்’ திட்டம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது. சுதந்திர சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வகையில் மார்ச் 2026 வரை அத்திட்டம் மேற்கொள்ளப்படும்.

நாட்டைக் கட்டியெழுப்பிய ஆண்டுகளைச் சித்திரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இக்கதைகள் ‘பாப்-அப்’ கண்காட்சிகள் வழி தீவு முழுவதும் கிட்டத்தட்ட 26 இடங்களில் இடம்பெறும்.

இந்த ‘பாப்-அப்’ கண்காட்சி, தெம்பனிஸ் வட்டார நூலகத்திலும் கிளமெண்டி பொது நூலகத்திலும் தொடங்கப்பட்டது.

புதன்கிழமை (ஜூன் 18) உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ‘குடிமக்கள் திட்டப்பணி – ஒரு மில்லியன்’ திட்டத்தின் ‘பாப்-அப்’ கண்காட்சியைப் பார்வையிட்டார் கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ.

“மீள்தன்மை, கடின உழைப்பு, உறுதிப்பாடு போன்ற குணங்களை நாம் நம் முதல் தலைமுறையினரிடம் கற்றுக்கொள்ளலாம்,” என்று தமது தொடக்க உரையில் எடுத்துக்கூறினார் திரு நியோ.

சிங்கப்பூரை வடிவமைத்தோரின் கதைகளைச் சித்திரிக்கும் இந்தத் திட்டம் அவர்களின் மன உறுதியை உயிர்ப்பிக்கும் கதைகளை எடுத்துக்கூறும் என்றார் திரு நியோ.

“தொடக்க ஆண்டுகளில் குடியுரிமை, பொருளியல், கலாசார நல்லிணக்கம் ஆகியவை கேள்விக்குறியாக இருந்த சூழ்நிலைகளை இக்கதைகள் விளக்குகின்றன,” என்றார் அவர்.

ஓராண்டு முழுவதும் நடைபெறும் இத்திட்டத்தில் ‘பாப்-அப்’ கண்காட்சிகள் தவிர மேலும் இரண்டு முயற்சிகள் இடம்பெறவுள்ளன.

மூத்தோர் ஈடுபாட்டுத் திட்டம், சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தில் ‘பார்வையாளர் மட்டுமல்லர்: சிங்கப்பூரின் பல்லின பண்பாட்டு உருவாக்கங்கள்’ அனுபவம் ஆகியவற்றையும் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம்.

சுதந்திர சிங்கப்பூரின் முதல் தலைமுறையினரின் பங்களிப்பைப் பாராட்டுவதுடன் ‘குடிமக்கள் திட்டப்பணி – ஒரு மில்லியன்’ திட்டம் அடுத்த தலைமுறைக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்றார் சிற்பிகள் நினைவகத்தின் பங்காளித்துவம், நிகழ்ச்சிகள் துணை இயக்குநர் பவானி செல்வகுமார்.

2028ஆம் ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகம் ‘பே ஈஸ்ட் கார்டனில்’ அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும்.

ஒருங்கிணைந்த கலைக்கூடம், தோட்டங்கள் கொண்ட இந்தப் புதிய நினைவகத்தைக் கட்டியெழுப்ப S$335 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்