சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தை ஒட்டி, சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறைக்குப் புகழாரம் சூட்டும் வகையில் ‘குடிமக்கள் திட்டப்பணி - முதல் மில்லியன்’ (Project Citizens - The First Million) எனும் இயக்கத்தைச் சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகம் அண்மையில் தொடங்கியிருக்கிறது.
1966ஆம் ஆண்டில் இளஞ்சிவப்பு அடையாள அட்டைகளைப் பெற்ற முதல் ஒரு மில்லியன் சிங்கப்பூரர்களின் கதைகளைப் படம்பிடித்துக்காட்டும் முயற்சி இது.
இதுபற்றி தமது தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்ட பிரதமர் லாரன்ஸ் வோங், “அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர், கடுமையான இன்னல்களை எதிர்கொண்டனர். அத்தகைய சூழலிலும், அவர்கள் ஒரே மக்களாக வளர்ந்தனர். பகிர்ந்த நோக்கம், பொதுவான இலக்கு குறித்த ஆழமான உணர்வை அந்த அனுபவங்கள் அவர்களுக்கு வழங்கின. அவர்கள் தங்களை மட்டுமல்லாது, ஒருவரை ஒருவர் கவனித்துக்கொண்டனர்,” என்றார்.
அடுத்துவந்த தலைமுறையினர் அத்தகைய சிரமங்களைக் கண்டதில்லை என்ற பிரதமர், இப்போதைய இளைய சிங்கப்பூரர்கள் அறிந்த ஒரே சிங்கப்பூர் இன்றுள்ளதுதான் என்றும் குறிப்பிட்டார்.
அதிர்ஷ்டமிருப்பின் இப்போதும் அவர்கள் தங்கள் தாத்தா-பாட்டி அல்லது கொள்ளுத்தாத்தா - கொள்ளுப்பாட்டியிடமிருந்து அந்தக் கதைகளைக் கேட்டறியலாம் என்றார் திரு வோங்.
‘குடிமக்கள் திட்டப்பணி - முதல் மில்லியன்’ இயக்கமானது 2025 ஏப்ரலில் தொடங்கி 2026 மார்ச் வரையிலும் இடம்பெறுகிறது.
‘மூத்தோர் ஈடுபாட்டுத் திட்டம்’, ‘குடிமக்கள் திட்டப்பணி சாவடிகள்’, ‘பார்வையாளர்கள் மட்டுமல்ல: சிங்கப்பூரின் பல்லினப் பண்பாட்டு உருவாக்கங்கள்’ என்ற மூன்று அங்கங்களை அது உள்ளடக்கியுள்ளது.
மூத்தோர் ஈடுபாட்டுத் திட்டமானது நமது முன்னோடித் தலைமுறையினரின் வாழ்க்கைக் கதைகளைச் சேகரித்து, அவர்களின் பங்களிப்புகள், நம்பிக்கைகள், கனவுகள், விழுமியங்களை எடுத்துரைக்கும். பல்வேறு நடவடிக்கைகள், தலைமுறையினர்க்கு இடையிலான கலந்துரையாடல் மூலம் தொண்டூழியர்கள் முன்னோடித் தலைமுறையினரின் அனுபவங்களை நினைவுகூரச் செய்து சேகரிப்பர். மக்கள் கழகம், ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, தேசிய நூலக வாரியம் போன்ற அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு இடங்களில் இடம்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
சமூக நிலையங்கள், நூலகங்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் புரோஜெக்ட் சிட்டிசன்ஸ் சாவடிகள் அமைக்கப்பட்டு, முன்னோடித் தலைமுறையின் குடியுரிமைப் பயணத்தை ஆராயும்.
‘பார்வையாளர்கள் மட்டுமல்ல: சிங்கப்பூரின் பல்லினப் பண்பாட்டு உருவாக்கங்கள்’ கண்காட்சியானது 2025 அக்டோபர் 31 முதல் 2026 வரை சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தில் இடம்பெறும்.
குடிமக்கள் திட்டப்பணி குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.foundersmemorial.gov.sg/project-citizens எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.

