அபாயகரமான முறையில் அல்லது கவனமின்றி வாகனம் ஓட்டும் குற்றங்களுக்குக் கட்டாயமாகக் குறைந்தபட்ச தண்டனை விதிக்கப்படும் என்ற விதிமுறை வரும் வியாழக்கிழமை (ஜூன் 12) முதல் அகற்றப்படும்.
முதல்முறை குற்றவாளிகளுக்கு இது பொருந்தும்.
சாலைப் போக்குவரத்து (பலவகை திருத்தங்கள்) சட்டத்தில் இடம்பெறும் திருத்தங்களில் சில, முதற்கட்டமாக ஒருமுறைக்கு மேல் அபாயகரமாக வாகனம் ஓட்டி மரணம் அல்லது மோசமான காயம் விளைவிக்கும் ஓட்டுநர்களுக்கான கட்டாய குறைந்தபட்ச சிறைத் தண்டனைகளும் குறைக்கப்படும்; மரணம் விளைவிக்கும் அத்தகைய ஓட்டுநர்களுக்கான கட்டாய சிறைத் தண்டனை ஈராண்டாகவும் காயம் ஏற்படுத்தியோருக்கான சிறைத் தண்னை ஓராண்டாகவும் குறைக்கப்படுகிறது.
முதல்முறை குற்றவாளிகளுக்குக் குறைந்தபட்ச தண்டனைகளாக சிறைத் தண்டனையும் குறிப்பிட்ட காலத்துக்கு அவர்கள் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுவந்தது. அந்த விதிமுறையும் அகற்றப்படும்.
ஒருமுறைக்கு மேல் தவறு இழைக்கும் குற்றவாளிகளுக்கான அதிகபட்ச தண்டனையில் மாற்றம் இல்லை. அபாயகரமாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அதேநேரம், மோசமான காயம் ஏற்படுத்துவது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிபட்சமாக 10 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
புதன்கிழமை (ஜூன் 11) வெளியிட்ட அறிக்கையில் உள்துறை அமைச்சு, “ஒவ்வொரு வழக்கிலும் தகுந்த தீர்ப்பு வழங்க நீதிமன்றங்களுக்கு நீக்குப்போக்கு இருக்கும். கடுமையான குற்றம் புரிவோருக்குத் தொடர்ந்து கடும் தண்டனைகள் விதிக்கப்படும் என்பது உள்துறை அமைச்சின் எதிர்பார்ப்பு,” எனக் குறிப்பிட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்தாண்டுகளில் காணப்படாத அளவில் அதிகமாகப் பதிவானது என்று போக்குவரத்துக் காவல்துறை ஆண்டுதோறும் வெளியிட்டுவரும் புள்ளி விவரங்களில் தெரியவந்தது. அந்தப் புள்ளி விவரங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வெளியிடப்பட்டன.
சென்ற ஆண்டு மொத்தம் 130 சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டது. அவற்றில் 46 விபத்துகள் வாகனத்தை அளவுக்கதிகமாக வேகமாக ஓட்டியதன் காரணமாக நேர்ந்தன.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு சாலை விபத்துகளில் 142 பேர் உயிரிழந்தனர்.
“சிங்கப்பூரின் சாலைப் பாதுகாப்பு நிலவரம் உள்துறை அமைச்சுக்குத் தொடர்ந்து கவலை தருகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உட்பட மோசமான வாகனம் ஓட்டும் பழக்கங்களுக்கு எதிராகப் போக்குவரத்துக் காவல்துறை அதன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது,” என்று உள்துறை அமைச்சு எடுத்துரைத்தது.
“வேக உச்சவரம்பை மீறும் குற்றங்களுக்கான தண்டனைகளை அண்மையில் கடுமையாக்கினோம். பொறுப்பாக ஓட்டும் கலாசாரத்தை ஊக்குவிக்கவும் குற்றவாளிகளுக்கு உகந்த தண்டனை விதிக்கப்படுவதை உறுதிசெய்யவும் மற்ற சட்டங்களையும் மறுபரிசீலனை செய்துவருகிறோம்,” என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

