எல்லை தாண்டிய வர்த்தகத்துக்குப் புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சான்றிதழைப் (REC) பெற வகைசெய்யும் கட்டமைப்புக்கான நகலை, எரிசக்திக்கான அனைத்துலகத் தரநிலை வரையறுப்பு அமைப்பு ஒன்றுடன் இணைந்து சிங்கப்பூர் வரையறுத்துள்ளது.
தென்கிழக்காசிய வட்டார நாடுகளுக்குள் எல்லை தாண்டிய வர்த்தகம் மேற்கொள்வதற்கு இது பொருந்தும்.
இதன்மூலம் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் அண்டை நாடுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழங்கும் அமைப்புகளிடமிருந்து அந்தச் சான்றிதழ்களை வாங்க இயலும்.
அந்தச் சான்றிதழை ‘ஸ்கோப் 2 வெளியேற்றம்’ எனப்படும் அவை வாங்கிய மின்சாரத்துடன் தொடர்புடைய சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்கள் வெளியேற்றம் தொடர்பான சலுகைகளுக்கு விண்ணப்பிக்க அவை பயன்படுத்தலாம்.
நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து அந்தச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஏற்கெனவே அனுமதி இருந்தபோதும் ஆசியான் நாடுகளின் அரசாங்கங்கள் வெவ்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதால் எல்லை தாண்டிய எரிசக்தி வர்த்தகம் தொடர்பில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அம்சங்களைக் கண்காணிப்பதில் சிக்கல் நிலவியது. வர்த்தக, தொழில் அமைச்சு, எரிசக்திச் சந்தை ஆணையம், அனைத்துலகக் கண்காணிப்புத் தரநிலை அறநிறுவனம் ஆகியவை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) வெளியிட்ட கூட்டறிக்கை அதனைத் தெரிவித்தது.
புதிய கட்டமைப்பு எல்லை தாண்டிய புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சான்றிதழ்களைக் கண்காணித்து, பதிவுசெய்யும் அணுகுமுறைகளை நாடுகள் தரநிலைப்படுத்த உதவுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்தக் கட்டமைப்பு குறித்த தகவலை வர்த்தக, தொழில் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

