உலக அளவில் தொடரும் புவிசார் அரசியல் சூழல் பருவநிலை நடவடிக்கையை இன்னும் வலுப்படுத்துவதாகப் பருவநிலை செயல்பாட்டிற்கான சிங்கப்பூர்த் தூதர் ரவி மேனன் கூறியுள்ளார்.
எரிசக்திப் பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மையான சுற்றுப்புறம் ஆகியவை மீண்டும் வலியுறுத்தப்படும் முக்கிய அம்சங்களாகத் தொடர்ந்து மாறிவருகின்றன என்றார் அவர்.
சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரு மேனன் பேசினார்.
எண்ணெய், எரிவாயு உற்பத்தியின் பெரும்பங்கு, சிறிய வட்டாரங்களில்தான் அமைந்துள்ளன என்றார் சிங்கப்பூர் மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான திரு மேனன்.
பெரும்பாலான சரக்குக் கப்பல்களும் ஒருசில முக்கிய பாதைகள் வழியாக செல்கின்றன என்ற அவர், அவை முக்கிய அபாயங்களை முன்வைப்பதாகக் குறிப்பிட்டார்.
பல்வேறு இடங்களிலிருந்து எண்ணெய், எரிவாயுவைப் பெறுவது, நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட எரிசக்திக்கு மாறுவது ஆகியவைக் குறுகியக் காலத் திட்டங்கள் என்ற அவர், எரிசக்தியை மிச்சப்படுத்தும் திட்டங்களுக்கு மாறுவதும் இயற்கை எரிசக்திக்கு மாறுவதுமே நீண்டகாலத்துக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய உத்திகள் என்று குறிப்பிட்டார்.
மத்திய கிழக்குப் பூசலால் ஹோர்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் விநியோகம் நிலைகுத்தியுள்ளது.
அதேவேளை, வெள்ளம், வறட்சி போன்ற பருவநிலை மாற்றங்களும் உற்பத்திக்குத் தடையாக இருக்கின்றன. இதனால் உணவு, எரிபொருள், எரிசக்தி ஆகியவற்றின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்றார் திரு மேனன்.
தொடர்புடைய செய்திகள்
பருவநிலையால் பாதிக்கப்பட்ட உலகில் வர்த்தகத்தை மீள்திறனுடன் வைத்திருப்பது அவசியம் என்றார் அவர்.
சிங்கப்பூரில் உள்ள வர்த்தகங்களின் முன்னேற்றத்திற்கு அரசாங்கம், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்துடன் இணைந்து போட்டித்தன்மைமிக்க பருவநிலை உருமாற்ற மன்றத்தை அறிமுகம் செய்யவிருப்பதைத் திரு மேனன் சுட்டினார்.
அதற்குத் திரு மேனனும் சம்மேளனத் தலைமை நிர்வாகி கொக் பிங் சூனும் இணைந்து தலைமை தாங்குவர்.
மன்றத்தில் இணையும்படி பல்வேறு துறைகளில் உள்ள வர்த்தகப் பிரதிநிதிகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதைத் திரு மேனன் பகிர்ந்துகொண்டார்.

