‘யுஏஇ’யில் உள்ள நீர்ச் சுத்திகரிப்பு, மின்னாலைமீது தாக்குதல்: செம்ப்கார்ப் மறுப்பு

‘யுஏஇ’யில் உள்ள நீர்ச் சுத்திகரிப்பு, மின்னாலைமீது தாக்குதல்: செம்ப்கார்ப் மறுப்பு

1 mins read
ba4bf4d8-1b24-4f88-b0a5-3219de6b47a4
ஃபுஜைராவில் செயல்படும் எஃப்1 இன்டிபெண்டன்ட் நீர், மின் உற்பத்தி ஆலையில் செம்ப்கார்ப் நிறுவனம் 40 விழுக்காட்டுப் பங்குகளைக் கொண்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) உள்ள தனது மின்சாரம் மற்றும் நீர்ச் சுத்திகரிப்பு ஆலைமீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக வெளியான ஊடகச் செய்திகளைச் செம்ப்கார்ப் நிறுவனம் மறுத்துள்ளது.

ஃபுஜைராவில் செயல்படும் எஃப்1 இன்டிபெண்டன்ட் நீர், மின் உற்பத்தி ஆலையின் 40 விழுக்காட்டுப் பங்குகளை செம்ப்கார்ப் நிறுவனம் கொண்டுள்ளது.

அந்நிறுவனத்திற்கு ஓமானிலும் ஒரு நீர், மின்னாலையும் ஒரு சூரிய சக்தி ஆலையும் உள்ளன.

இந்நிலையில், “அம்மூன்று ஆலைகளிலும் செயல்பாடுகள் தடையின்றித் தொடர்கின்றன. நிலைமையை நாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். தற்போது எங்கள் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்,” என்று திங்கட்கிழமை (மார்ச் 9) அந்நிறுவனம் தெரிவித்தது.

இருப்பினும், ஊழியர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் அம்மூன்று ஆலைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அந்நிறுவனம் விளக்கியுள்ளது.

தாக்குதலால் எஃப்1 ஆலை சேதமுற்றதாக முதலில் ‘குளோபல் வாட்டர் இன்டலிஜென்ஸ்’ செய்தி வெளியிட்டிருந்தது. அதன்பின் சௌத் சைனா மார்னிங் போஸ்ட், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் போன்ற பல்வேறு ஊடகங்களும் அது தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து, அச்செய்தியை மறுத்து செம்ப்கார்ப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, திங்கட்கிழமை பங்குச் சந்தை தொடங்கியபோது செம்ப்கார்ப் நிறுவனப் பங்கு விலை 2.1 விழுக்காடு சரிவுகண்டது. ஆயினும் பின்னர் அது சற்றே மீண்டு, 0.5 விழுக்காடு கூடி, பிற்பகல் 2.13 மணிக்கு $5.75 என்ற நிலையில் இருந்தது.

குறிப்புச் சொற்கள்