குறைந்தபட்ச வருமான அறிக்கைக்கு மூன்று அமைச்சுகள் பதில் விளக்கம்

3 mins read
155dea8e-d4a0-4378-a8a3-20867908b2da
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தையும் லீ குவான் இயூ பொதுக் கொள்கை கழகத்தையும் சேர்ந்த ஆய்வாளர்கள், இவ்வாண்டுக்கான குறைந்தபட்ச வருமானத் தரங்கள் அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறைந்த வருமான ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவிபுரிய இன்னும் அதிகமாகச் செய்யப்படவேண்டுமா என்ற விவகாரம் வியாழக்கிழமை மீண்டும் தலையெடுத்தது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தையும் லீ குவான் இயூ பொதுக் கொள்கை கழகத்தையும் சேர்ந்த ஆய்வாளர்கள், இவ்வாண்டுக்கான குறைந்தபட்ச வருமானத் தரங்கள் அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையின்படி, பெற்றோர், பதின்ம வயதில் ஒரு பிள்ளை, பதின்ம வயதை எட்டாத ஒரு பிள்ளை என நால்வர் கொண்ட ஒரு குடும்பம், அடிப்படை வாழ்க்கைத் தரத்தை நிலைநாட்ட மாதத்திற்குக் குறைந்தது $6,693 தேவை.

எனவே, அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைந்த வருமானக் குடும்பங்கள் சமாளிக்க அனைவருக்கும் அடிப்படைச் சம்பளம் வகுக்கப்பட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்தது. அத்துடன், வசதியில்லாமல் ஓய்வுபெறுவோருக்காக மத்திய சேம நிதித் திட்டமும் சமூக ஆதரவுத் திட்டங்களும் சீரமைக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

இதனைத் தொடர்ந்து, நிதி அமைச்சு, மனிதவள அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகிய மூன்றும் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட கூட்டறிக்கை, “ஆய்வாளர்களின் அறிக்கையானது வீடு, உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளைப் பற்றியது மட்டுமன்று. அவை தனிமனிதர்கள் அடைய விரும்புபவை பற்றியது,” என்று குறிப்பிட்டது.

அரசாங்கத்தின் அணுகுமுறை சிங்கப்பூரர்களுக்கு, குறிப்பாகத் தேவை உள்ளோருக்கு, வாழ்நாள் முழுவதும் ஆதரவளிப்பதில் உறுதியாக இருப்பதாகக் கூட்டறிக்கை தெரிவித்தது. சிங்கப்பூரர்கள் நல்ல வேலைகளில் சேரவும் உயர் வருமானம் பெறவும் கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, பொதுக் குடியிருப்பு போன்றவை உள்ளிட்ட மனித மூலதனத்தில் முதலீடு செய்வதாக அமைச்சுகள் கூறின.

அரசாங்கத்தின் சமூகச் செலவு 2011 நிதியாண்டின் $18 பில்லியனில் இருந்து 2021 நிதியாண்டில் $34 பில்லியனுக்கு அதிகரித்திருப்பதையும் அமைச்சுகள் சுட்டிக்காட்டின.

ஆய்வாளர்களின் அறிக்கையின்படி, நால்வர் கொண்ட குடும்பத்திற்கு மாதத்திற்கு $6,693 வருமானமும் ஒரு குழந்தையுடன் வாழும் ஒற்றைப் பெற்றோருக்கு $3,369 வருமானமும் தேவைப்படும். ஆனால், சிங்கப்பூரில் உள்ள வேலை செய்யும் குடும்பங்களில் சுமார் 30 விழுக்காட்டினர் இதற்குக் குறைவாகச் சம்பாதிப்பதாக அறிக்கை தெரிவித்தது.

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள படிப்படியான சம்பள உயர்வு முறையின்கீழ், குறைந்த வருமான ஊழியர்களில் பத்தில் ஒன்பது பேர் தற்போது இடம்பெறுவதாக அமைச்சுகள் குறிப்பிட்டன. இத்திட்டம் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சுகள் கூறின.

ஓய்வுக்காலத் தேவையைப் பொறுத்தவரை, தனியாக வாழும் 65 வயதுக்கு மேற்பட்ட ஒரு முதியவருக்கு மத்திய சேம நிதியின் அடிப்படை ஓய்வுக்காலத் தொகையிலிருந்து கிடைக்கும் வழங்குதொகை, அவரது அடிப்படை வாழ்க்கைத் தரத்திற்குத் தேவைப்படும் தொகையில் 55 விழுக்காடுதான் என்று ஆய்வாளர்களின் அறிக்கை கண்டறிந்தது.

அடிப்படை ஓய்வுக்காலத் தொகையே போதாதிருக்கும் நிலையில், 2021ல் 55 வயதை அடைந்த மத்திய சேம நிதி உறுப்பினர்களில் 65 விழுக்காட்டினர் மட்டுமே அடிப்படைத் தொகையும் ஒரு வீடும் வைத்திருந்தனர் அல்லது முழு ஓய்வுக்காலத் தொகை வரை சேமித்து வைத்திருந்தனர் என்று அறிக்கை குறிப்பிட்டது.

மத்திய சேம நிதி சேமிப்பு சம்பளத்திலிருந்து வருகிறது. அந்தச் சம்பளமே போதாத நிலையில் கட்டாயச் சேமிப்பு ஓய்வுக்காலத்திற்குப் போதிய அளவு தயார்ப்படுத்துவதில்லை என்று அறிக்கை கூறியது.

இதற்குப் பதிலளித்த அமைச்சுகள், ஓய்வுக்காலத் தேவையை வலுப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே மறுஆய்வுகள் நடத்தி வருவதாகத் தெரிவித்தது. வேலை செய்து மத்திய சேம நிதிக் கணக்கில் தொடர்ந்து பணம் போடுவோரால் அடிப்படை ஓய்வுக்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றும் அமைச்சுகள் கூறின.

ஆய்வாளர்களின் அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள், கணக்கீட்டு முறை பற்றியும் அமைச்சுகள் கருத்துரைத்தன.

அடிப்படைத் தேவைகளுக்கான குறைந்தபட்ச வருமானத்தை மிகைப்படுத்தியும், குறைந்த வருமானக் குடும்பங்கள் பெறும் அரசாங்க ஆதரவை மட்டுப்படுத்தியும் காட்டக்கூடிய அபாயம் இருப்பதாக அமைச்சுகள் கூறின.

எடுத்துக்காட்டாக, குறைந்தபட்ச வருமானத் தரத்தில் நகை, வாசனைத் திரவியம், வெளிநாட்டு விடுமுறைகள் போன்ற விலையுயர்ந்த செலவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்