முக்கியக் கட்டமைப்புகளை நிர்வகிப்போருக்குச் சந்தேகத்திற்குரிய இணையத் தாக்குதல்கள் குறித்துத் தெரிவிக்க அதிகாரம் அளிப்பது சிங்கப்பூரின் தற்காப்பு நடைமுறைகளை வலுப்படுத்த உதவும் என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) தெரிவித்திருக்கிறார்.
எரிசக்தி, தண்ணீர், போக்குவரத்துச் சேவைகளை வழங்குவோர் அவர்களில் அடங்குவர் என்றார் அவர்.
அண்மையில் சிங்கப்பூருக்கு இணையத் தாக்குதல் குறித்துத் தொடர் மிரட்டல் விடுத்த நாட்டின் பெயரை வெளியிடத் திரு சண்முகம் மறுத்துவிட்டார். இணைய அத்துமீறல்கள் தற்போது இருக்கின்றன, எதிர்காலத்திலும் அவை வரும் என்ற மனப்போக்கைக் கொண்டிருக்கும்படி நிறுவனங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
‘எக்சர்சைஸ் சைபர் ஸ்டார்’ கண்காட்சிக்கு இடையே பேசிய திரு சண்முகம், “ஏற்றுக்கொண்டு, தற்காக்கத் தயாராக இருக்கவேண்டும்,” என்றார். சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு ஈராண்டுகளுக்கு ஒரு முறை பாவனைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறது.
“சந்தேகம் எழுந்தால் உடனே எங்களிடம் தெரிவியுங்கள். அதைக் கையாள நாங்கள் உங்களோடு இணைந்து செயல்படுவோம்,” என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூரின் முக்கியத் தகவல் உள்கட்டமைப்பு வெளிநாட்டு அரசாங்க ஆதரவு பெற்ற ‘யுஎன்சி3886’ இணைய உளவு அமைப்பின் தாக்குதலுக்கு இலக்கானதாக அதிகாரிகள் ஜூலை மாதம் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து திரு சண்முகத்தின் அண்மைய கருத்துகள் வந்துள்ளன.
“பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் என்று கருதுவதை நாங்கள் வெளியிடுகிறோம். குறிப்பிட்ட நாட்டின் பெயரை வெளியிடுவது இப்போது எங்கள் நோக்கமன்று,” என்று அமைச்சர் சண்முகம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.
சம்பந்தப்பட்ட அமைப்பு, சீனாவுடன் தொடர்புடையது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

