அவசர மருத்துவ உதவிக்கு ஹெலிகாப்டரைப் பயன்படுத்திய சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை

அவசர மருத்துவ உதவிக்கு ஹெலிகாப்டரைப் பயன்படுத்திய சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை

2 mins read
61462a22-f849-4c38-b079-30536d39ea9d
 ‘ரெஸ்கியூ 10’  ஹெலிகாப்டர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் ஹெலிபேட்டில் இறங்கியது. - படம்: சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை

அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட ஒருவரைக் கப்பலில் இருந்து வெளியேற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளது சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் தேடி மீட்கும் பிரிவு.

அந்தப் பிரிவின் ‘ரெஸ்கியூ 10’ என்று குறிக்கப்படும் மீட்பு ஹெலிகாப்டரை அந்தப் படை அதற்குப் பயன்படுத்தியது.

கப்பலில் இருந்த நோயாளியை ஹெலிகாப்டரில் ஏற்றி, சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் (ஹெலிபேட்) பாதுகாப்பாக இறக்கிவிட்டதாக அந்தப் படை சனிக்கிழமை (ஜூலை 11) தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

மருத்துவமனையின் பணியாளர்களிடம் நோயாளி ஒப்படைக்கப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாக படை தெரிவித்தது.

“சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் வீரர்களுக்கும் எந்த நேரத்திலும் பணியாற்றத் தயாராக இருக்கும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களுக்கும் பாராட்டுகள்,” என்று அது தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (ஜூலை 10) இரவு 10.35 மணியளவில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையை நோக்கி ஹெலிகாப்டர் ஒன்று வந்ததைக் கண்டதாக ஆண்ட்ரூ ஓங் என்பவர் கூறினார்.

அதனை அவர் காணொளிப் படமாக எடுத்து வெளியிட்டார். ஹெலிகாப்டர் இறங்குதளம் நோக்கி இறங்குவதையும் அவசரச் சேவை வாகனங்கள் அந்த இடத்தில் காத்திருப்பதையும் அந்தப் படத்தில் காணமுடிந்தது.

மெக்அலிஸ்டர் ரோட்டிலுள்ள பழைய ஹெலிபேட் புல்வெளிப் பகுதியாக இருக்கும் நிலையில், புதிய ஹெலிபேட் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் புதிய அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகே, காலேஜ் ரோட்டில் கட்டப்பட்டுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதுபோன்று அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளியைக் கொண்டு வர சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையுடன் இணைந்து பயிற்சி செய்ததாக சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஜூன் 1ஆம் தேதி தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்