சிங்கப்பூர் கடற்பகுதிகளைப் பாதுகாக்கும் சிங்கப்பூர்க் குடியரசுக் கடற்படையின் மூன்று கப்பல்கள் ஜனவரி 2025 முதல் செயல்பட்டு வருகின்றன.
ஆளில்லாக் கப்பல்களாக இயங்கும் அவை, மிரட்டல் எந்த உருவில் வந்தாலும் அதற்கு ஏற்ப பதிலடி தரும் ஆற்றலுடைவை என்று பிப்ரவரி 4ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சிங்கப்பூர்க் கடற்படை செய்தியாளர்களிடம் தெரிவித்தது.
கடல்துறைப் பாதுகாப்புக்கென இயங்கும் இந்தப் புதிய ஆளில்லாக் கடல் மேற்பரப்புக் கப்பல்களால், எச்சரிக்கை ஒலிகள் அல்லது குரல்வழி உத்தரவுகள் மூலம் மற்ற கப்பல்களின் கவனத்தைப் பெற முடியும்.
அத்துடன், சந்தேகப் பேர்வழிகளைச் சற்று திசை திருப்ப அதிக ஒளிதரும் ‘லேசர்’ அம்சத்தையும் அவை கொண்டுள்ளன. ஆளில்லாக் கப்பல்களைக் கரையில் இருந்தவாறு இயக்குவோரின் மூலம் அந்தக் கப்பல்களால் இயந்திரத் துப்பாக்கிகளையும் பயன்படுத்த முடியும்.
சாங்கி கடற்படைத் தளத்தில் புதிய ஆளில்லா கப்பலின் செயல்பாடுகளை பிப்ரவரி 4ஆம் தேதி செய்தியாளர்கள் நேரடியாகக் காணும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஒவ்வோர் ஆளில்லாக் கப்பலும் 16.9 மீட்டர் நீளமும் 30 டன் எடையும் கொண்டவை. மணிக்கு ஏறத்தாழ 46 கிலோமீட்டர் வேகத்தில் கடலில் செல்லக்கூடிய இவை, சுமார் 36 மணி நேரம் வரை தொடர்ந்து இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
கரையின் கடல் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து இரண்டு பேர் கொண்ட குழுவால் இயக்கப்படும் இந்த ஆளில்லாக் கப்பல், ‘ரேடார்’, கேமராக்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்திச் சூழலை மதிப்பிட்டு தகவல்களைச் சேகரிக்கவும் உதவுகிறது.
சிங்கப்பூர்க் கடற்படையின் ஆளில்லாக் கப்பல்களைச் செலுத்தும் அணியின் தலைவராக உள்ள ME2 பரத் செல்வராமா, நான்கு ஆண்டுகளாகத் தம் குழுவை வழிநடத்தி வருகிறார். இரண்டு பேர் கொண்ட அணியின் ஒருவரான பரத், ஆயுத நிபுணர் தொழில் பிரிவில் உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தம் தொழில் பிரிவின் அனுபவத்திலிருந்து ஆயுதங்களைக் கையாண்டு வருவதால் ஆளில்லாக் கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ள ஆயுதங்களை எவ்வாறு செலுத்துவது என்ற செயல்முறைக்கு பங்களித்துள்ளார் பரத்.
“மனிதனால் இயக்கப்படும் கப்பலுடன் ஒப்பிடும்போது, ஆளில்லாக் கப்பலைக் கையாள்வது வேறுபட்ட ஒரு சவால். ஒரு குழுத் தலைவராக எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது,” என்று தம் பணியைப் பற்றி விவரித்தார் பரத்.
அதிக அளவில் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு இந்த கப்பல்களுக்கு உரிய அதிகாரம் இருப்பதால் இவை சிங்கப்பூர் கடல் பாதுகாப்பின் ஒரு புத்தாக்க முன்முயற்சி என்றார் சிங்கப்பூர் கடற்படையின் 6வது புளோட்டிலா தலைமை அதிகாரி கர்னல் துங் யீ மெங்.
“தேவைப்படும்போது எந்த நேரத்திலும் பயன்படுத்துவதற்குக் குறைந்தபட்சம் ஓர் ஆளில்லா கப்பல் தயாராக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்கால நோக்கம்,” என்றார் கர்னல் துங்.
இவ்வாண்டின் பிற்பாதியில் நான்காவது கப்பலும் செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.