சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் நகைக் கடைகளில் பொருள்கள் வாங்கும் போது சிலவற்றை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளில் தங்கத்தின் தடிமன் வேறுபடுவதைப் பயனீட்டாளர் கண்காணிப்பாளர்கள் கண்டறிந்தனர். அதையடுத்து தற்போது பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நகைகளை வாங்குவதற்குமுன் அதன் உள்ளடக்கத்தைச் சரிபார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கடைகளில் சான்றிதழ் அல்லது தரப் பரிசோதனை அறிக்கைகளைக் கேட்பதன் மூலம் பயனீட்டாளர்கள் நகையின் உள்ளடக்கத்தைப் பெறலாம் என்று சிங்கப்பூர்ப் போட்டித் தன்மை, பயனீட்டாளர் ஆணையம், சிங்கப்பூர் நகை விற்பனையாளர்கள் சங்கம், சிங்கப்பூர் அடகுக்கடைக்காரர்கள் சங்கம் ஆகியவையும் கேட்டுக்கொண்டன.
வியாழக்கிழமை (ஜூலை 9) மூன்று அமைப்புகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இவை குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிகாரபூர்வ ஆவணங்களைச் சரிபார்ப்பதன் மூலம் உலோகங்களின் தூய்மை, எடை, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்று அவை கூறின.
தங்கத்தின் விலை உயர்ந்து வரும் வேளையில், உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் நகைகளில் தங்க முலாம் பூசப்பட்டது என்ற வார்த்தையைத் தெளிவற்ற முறையில் பயன்படுத்துகிறார்கள் என்று மூன்று அமைப்புகளும் சுட்டிக்காட்டின.
ரகசிய வாடிக்கையாளர் சோதனை முறையில் வாங்கப்பட்ட மூன்று தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளின் வெளிப்புறத் தங்கத் தடிமன் சோதிக்கப்பட்டதில், அவை ஒவ்வொன்றிலும் கணிசமாக வேறுபட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த அறிவுரை வந்துள்ளது.
சோதனையின் போது அந்த மூன்று நகைகளின் தங்கத்தின் கலவை 98.4 விழுக்காடு முதல் 99.9 விழுக்காடு வரை இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நகைகளில் இரண்டு சாதாரணக் கடைகளிலும், ஒன்று இணையப் பக்கத்திலும் வாங்கப்பட்டன.
“நுகர்வோர் நகைகளை வாங்கும்போது, அவர்கள் எதற்குப் பணம் செலுத்துகிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று சிங்கப்பூர்ப் போட்டித் தன்மை, பயனீட்டாளர் ஆணையம் கேட்டுக்கொண்டது.

