தனது உறவினர் மகளைப் பிரிந்து வாழும் கணவரின் பேச்சைக் கேட்ட ஆடவர் ஒருவர், சாலையோரத்தில் வேறொரு நபரைக் குழுவாகச் சேர்ந்து தாக்கியிருக்கிறார்.
தாக்கப்பட்ட நபர், ஆடவரின் உறவினர் மகளுடன் கள்ள உறவில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது. அவர் பிடபிள்யு4 என்று நீதிமன்ற ஆவணங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொது இடத்தில் பிடபிள்யு4-ன் ஆடைகளைக் கழற்றி அவர் நிர்வாணமாக இருப்பதை சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் காணொளியில் பதிவுசெய்தார். அந்தக் காணொளியை அவர் பிடபிள்யு4-க்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 55 வயதாகும் குற்றவாளிக்குக் குறைந்தது ஐந்தரை ஆண்டுச் சிறைத் தண்டனையும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்குமாறு துணை அரசாங்க வழக்கறிஞர் ஜெரிமி பின், வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 29) நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். குற்றவாளி, காணொளி எடுத்துப் பிறருக்கு அனுப்புமாறு தனக்குத் துணைபோனவரிடம் கூறியதாக அரசாங்க துணை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
ஏ1 என்று நீதிமன்ற ஆவணங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள குற்றவாளிக்கு 14 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்குமாறு அவருக்காக வாதிடும் வழக்கறிஞர் சட்வன்ட் சிங் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
நீதிமன்ற விசாரணையின் முடிவில், சட்டவிரோதமான முறையில் பிறருக்குத் தொந்தரவு இழைத்ததாகவும் அந்தரங்கப் படங்களை அனுப்பப் பிறரைத் தூண்டியதாகவும் தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை ஏ1 ஒப்புக்கொண்டிருந்தார். வரும் அக்டோபர் மாதம் எட்டாம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும்.