மறுவிற்பனை வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டு விலை வளர்ச்சி விகிதம் காலாண்டு அடிப்படையில் இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாகக் காணப்படாத அளவில் குறைவாகப் பதிவாகியுள்ளது.
சொத்துச் சந்தை தொடர்ந்து தணிந்து வருவதை இந்தப் போக்கு காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இவ்வாண்டு ஜூலையிலிருந்து செப்டம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் மறுவிற்பனை வீவக வீட்டு விலை 0.4 விழுக்காடு அதிகரித்தது. இரண்டாம் காலாண்டில் பதிவான 0.9 விழுக்காட்டைவிட இது குறைவாகும். முதல் காலாண்டில் இவ்விகிதம் 1.6 விழுக்காடாகப் பதிவானது.
வீவக மறுவிற்பனை விலைக் குறியீட்டில் இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன.
தொடர்ந்து நான்காவது காலாண்டாக மறுவிற்பனை வீட்டு விலை வளர்ச்சி அதிக அளவில் பதிவாகாமல் இருப்பதாக வீவக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) தெரிவித்தது. 2020ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுக்குப் பிறகு மறுவிற்பனை வீட்டு விலை இவ்வளவு குறைவான விகிதத்தில் அதிகரிக்கவில்லை என்று வீவக குறிப்பிட்டது.
இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் மறுவிற்பனை வீட்டுப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 1.7 விழுக்காடு அதிகரித்து 7,221ஆகப் பதிவானது. இரண்டாம் காலாண்டில் இந்த எண்ணிக்கை 7,102ஆக இருந்தது.
எனினும், சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானதுடன் ஒப்பிடுகையில் இம்முறை எண்ணிக்கை 11.3 விழுக்காடு குறைவாகப் பதிவானது எனக் கழகம் சுட்டியது.
வீவக வீடுகளை வாடகைக்கு விடுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் 0.6 விழுக்காடு அதிகரித்து 10,123ஆகப் பதிவானது. இரண்டாம் காலாண்டில் இந்த எண்ணிக்கை 10,066ஆக இருந்தது. அனுமதி வழங்கப்பட்ட வாடகை வீடுகளுக்கான விண்ணப்பங்களுக்கும் இது பொருந்தும்.
தொடர்புடைய செய்திகள்
ஆண்டு அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்ட வாடகை வீட்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 11 விழுக்காடு அதிகரித்துள்ளன.
செப்டம்பர் இறுதி நிலவரப்படி 59,001 வீவக வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. இந்த எண்ணிக்கை, முந்தைய காலாண்டில் பதிவான 58,720ஐவிட 0.5 விழுக்காடு அதிகமாகும்.
தனியார் வீடுகளைப் பொறுத்தவரை வீட்டு விலை கூடுதல் வேகமாக அதிகரித்தது, விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
தனியார் தரை வீடுகளின் விலை 1.4 விழுக்காடும் இதர தனியார் வீடுகளின் விலை 0.8 விழுக்காடும் அதிகரித்தன.

