தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலாயாப் பல்கலைக்கழகத்தில் கவிக்கோ பெயரில் ஆய்விருக்கை

3 mins read
சிங்கப்பூர் ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை ஆய்விருக்கையை அமைத்தது
d1a2c2fe-e75f-4717-9155-f0a4145ce417
500,000 ரிங்கிட்டிற்கான மாதிரிக் காசோலையைத் திரு. முகம்மது முஸ்தபா, மலேசிய உயர் கல்வி அமைச்சரிடம் (நடுவில்) வழங்குகிறார். - செய்தியும் படங்களும்: நா. ஆண்டியப்பன்

சிங்கப்பூரின் ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில், மிகச் சிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் பெயரில் ஆய்விருக்கை அமைத்திருக்கிறது. அதற்காக அது 500,000 ரிங்கிட் ($150,703) நிதி வழங்கியிருக்கிறது.

ஆய்விருக்கை தொடக்கம் மற்றும் நிதி வழங்கும் விழா கடந்த வியாழக்கிழமை (ஜூலை 17) காலை அந்தப் பல்கலைக்கழத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக மலேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் டாக்டர் சம்ரி அப்துல் காதிர் கலந்துகொண்டார்.

ஓர் இனத்தின் அடையாளம் மொழிதான் என்றும் அதை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது என்றும் அமைச்சர் தமது உரையில் வலியுறுத்தினார். மேலும் மலேசியாவிலும் தமிழ்நாட்டிலும் தமிழ் முஸ்லிம்கள் மொழிக்காக அளப்பரிய பணி ஆற்றியிருப்பாதாக டாக்டர் சம்ரி புகழ்ந்தார்.

நிதி வழங்கும் விழாவில் மலாயாப் பல்கலைக்கழத் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் நூர் அஸ்வான் அபு ஒஸ்மான், நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம். சரவணன், மலேசிய இஸ்லாமியக் கல்வி வாரியத்தின் தலைவர் முகம்மது இக்பால், இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் முனைவர் இரவீந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கவிக்கோ பற்றிய கருத்தரங்கமும் நடைபெற்றது. அதற்குத் தலைமையேற்று உரையாற்றிய திரு சரவணன், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் வரிசையில் மிகப் பெரிய கவிஞராகத் திகழ்ந்தவர் ‘கவிக்கோ’ என்று கூறினார். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்பதை அந்த நிகழ்ச்சி மெய்ப்பித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கருத்தரங்கில் தமிழ்நாட்டின் பேராசிரியர் முனைவர் அப்துல் சமது, இலங்கையின் பேராசிரியர் முனைவர் ரமீஸ், சிங்கப்பூரின் திரு. நா. ஆண்டியப்பன், மலேசியாவின் முனைவர் கிருஷ்ணன் மணியம், முனைவர் சில்லாழி கந்தசாமி ஆகியோர் ‘கவிக்கோ’ பற்றி பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

‘கவிக்கோ’ ஆய்விருக்கையின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர் ஷாநவாஸ் விளக்கினார்.

மலேசியாவில் தமிழ் இலக்கியம், கவிதை, சொற்பொழிவு, தமிழ் இஸ்லாமிய இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் ‘கவிக்கோ’ விருது வழங்குவது. மேலும், லேசியாவில் மிகச் சிறந்த ஆசிரியர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கவிஞர் சீனி நெய்னா முகம்மது பெயரில் நல்லாசிரியர் விருது வழங்குதல், தமிழ்த் துறையில் சிறந்து விளங்கும் மாணவர் ஒருவருக்குப் பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் விருது வழங்குதல்; தமிழ்மொழி, இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முதன்மைச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தல், தமிழ்மொழி, இலக்கியத்தில் புதிய முன்னேற்றங்கள் குறித்து ஒவ்வோர் ஆண்டும் ஒரு தேசிய அல்லது அனைத்துலக மாநாட்டுக்கு ஏற்பாடு செய்வது ஆகியவை அடங்கும். இவற்றுடன், ஸ்லாமியக் கூறுகளுடன் தமிழ்மொழி, இலக்கியம் என்ற தலைப்பில் நூல்கள் வெளியிடுதல், நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்திய ஆய்வுத் துறை மாணவர்களுக்கு உதவித்தொகையாக 10 விழுக்காடு நன்கொடை அளித்தல், இந்தியக் கல்வித் துறை சாராத மாணவர்களுக்கு ஈவுத்தொகையில் 10 விழுக்காடு உதவித்தொகையாக வழங்குதல் ஆகியவை ஆய்விருக்கையின் முக்கிய நோக்கங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
(இடமிருந்து) திரு சரவணனுக்கு திரு. முஸ்தபா பொன்னாடை போர்த்த திரு முகம்மது இக்பால் நினைவுப் பரிசு வழங்குகிறார். அருகில் இலங்கைப் பேராசிரியர் முனைவர் ரமீஸ் அப்துல்லா, மலேசியாவின் முனைவர் இரவீந்திரன், தமிழ் நாட்டின் பேராசிரியர் அப்துல் சமது, சிங்கப்பூரின் திரு. நா. ஆண்டியப்பன்.
(இடமிருந்து) திரு சரவணனுக்கு திரு. முஸ்தபா பொன்னாடை போர்த்த திரு முகம்மது இக்பால் நினைவுப் பரிசு வழங்குகிறார். அருகில் இலங்கைப் பேராசிரியர் முனைவர் ரமீஸ் அப்துல்லா, மலேசியாவின் முனைவர் இரவீந்திரன், தமிழ் நாட்டின் பேராசிரியர் அப்துல் சமது, சிங்கப்பூரின் திரு. நா. ஆண்டியப்பன். - படம்: நா. ஆண்டியப்பன்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழவேள் கோ. சாரங்கபாணி பெயரில் ஆய்விருக்கை அமைத்து அதன் வழி ஆய்வு மாணவர்களுக்கு நிதியுதவி செய்வதுடன் ஆண்டுதோறும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் வெளியிடப்படும் சிறந்த தமிழ் நூலுக்குக் கரிகாலன் விருது வழங்க ஏற்பாடு செய்துவரும் பெருமையும் ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளையைச் சேரும்.

குறிப்புச் சொற்கள்