பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கிகளிடமிருந்து ரூ. 1 டிரில்லியன் திரட்ட ரிசர்வ் வங்கி முடிவு

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கிகளிடமிருந்து ரூ. 1 டிரில்லியன் திரட்ட ரிசர்வ் வங்கி முடிவு

2 mins read
150740ed-6d1d-4c0a-82e3-fb6a55f6b7cc
கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின் பத்திர இருப்பு 40 விழுக்காட்டுக்கும் கூடுதலாக அதிகரித்து, கிட்டத்தட்ட 23 டிரில்லியன் ரூபாயை எட்டியது.  - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவின் வங்கிக் கட்டமைப்பில் அளவுக்கு அதிகமாக உள்ள பணப்புழக்கத்தைக் குறைக்கவும் அதன் மூலம் ஏற்படும் பணவீக்க அபாயத்தைக் கட்டுப்படுத்தவும் பத்திரங்கள் விற்பனை மூலம் வங்கிகளிடமிருந்து 1 டிரில்லியன் ரூபாயை (US$10.5 பில்லியன்) இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற உள்ளது.

இந்தப் பத்திர விற்பனை செப்டம்பர் 17, செப்டம்பர் 21, செப்டம்பர் 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அண்மைய மூலதனத் திரட்டல் நடவடிக்கைகள் மூலம் வங்கிகளில் உள்ள உபரி பணப்புழக்கம் சுமார் 11 டிரில்லியன் ரூபாய் என உச்சத்தைத் தொட்டிருப்பதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட ஏலத்தில் 2029, 2030, 2031, 2032 ஆகிய ஆண்டுகளில் முதிர்வடையும் அரசுப் பத்திரங்களை விற்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இந்தக் கூடுதல் கடன் பத்திர விநியோகம் காரணமாக, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) அரசுப் பத்திரங்களின் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது.

திங்கட்கிழமை பொது விடுமுறை என்பதால் இந்தியாவின் கடன் மற்றும் அந்நிய நாணயச் சந்தைகள் இயங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

“வங்கிகளில் உள்ள அதிகப்படியான நிதிப் புழக்கம் வட்டி விகிதங்களின் சமநிலையை சீர்குலைத்து வருகிறது,” என்று ‘பிஜிஐஎம் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட்’ நிறுவனத்தின் நிலை வருமானப் பிரிவுத் தலைவர் புனீத் பால் குறிப்பிட்டுள்ளார்.

“எனவே, மேலும் பத்திர விற்பனை உள்ளிட்ட பல்வேறு கூடுதல் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகப்படியான பணப்புழக்கத்தைக் குறைக்க, ரிசர்வ் வங்கியிடம் போதிய அளவிலான அரசுப் பத்திரங்கள் கைவசம் உள்ளன.

‘சிட்டிகுரூப்’ அமைப்பின் தகவல்படி, கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின் பத்திர இருப்பு 40 விழுக்காட்டுக்கும் கூடுதலாக அதிகரித்து, கிட்டத்தட்ட 23 டிரில்லியன் ரூபாயை எட்டியது. இது வழக்கமான அதிகரிப்பைவிட அதிகம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்