காலாங் பாரு வட்டாரத்தில் குறிப்பிட்டதொரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுத் தாழ்வாரத்தில் பலதரப்பட்ட தெய்வச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக ‘ஏட்வொர்ல்டு நியூஸ்’ தெரிவித்துள்ளது.
அந்தச் சிலைகளால் சங்கடப்படும் அண்டைவீட்டார் சிலர், அவ்வழியே செல்லாமல் வேறு வழியில் போய்விடுகின்றனர்.
சிலைகள் மீது மோதிவிடும் அச்சம் தங்களுக்கு உள்ளதாகச் சக்கர நாற்காலியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.
காலாங் பாருவின் புளோக் 64ல் அமைந்துள்ள அந்தத் தாழ்வாரத்தில் 60க்கும் அதிகமான தெய்வச் சிலைகள் இருப்பதாக அறியப்படுகிறது.
இந்திய தெய்வச் சிலைகளுடன் அவ்விடத்தில் சிரிக்கும் புத்தர், குவான்யின் போதிசத்வா, நரக ராஜா, இயேசு கிறிஸ்து ஆகிய சிலைகளும் உள்ளன.
இந்தச் சிலைகளுடன் அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் அலங்காரப் பொருள்களும் வைக்கப்பட்டுள்ளன.
வலது பக்கத்தில் மிதிவண்டிகள், அட்டைப் பெட்டிகள், சாய டின்கள், துருப்பிடிக்காத எஃகு அலமாரிகள் போன்றவை உள்ளன.
இவை போதாது என இரண்டு நாற்காலிகளுடைய பெரிய மேசை, அதன் மீது நொறுக்குத்தீனி, முட்டை அட்டைப் பெட்டிகள், அளவுகோல்கள் போன்றவையும் அவ்விடத்தில் காணப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்த இட நெருக்கடியால் குடியிருப்பாளர்கள் பலர் அதே மாடியின் மறுபுறத்தில் உள்ள மின்தூக்கிக்குச் செல்வதாகச் சிலர் கூறினர்.
சக்கர நாற்காலிப் பயனாளர்கள் மட்டுமன்றி அவ்விடத்தில் மருத்துவ அதிகாரிகளும் செல்லச் சிரமமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
வயதான குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கும் இவ்விடம் இடையூறாக உள்ளது எனச் சிலர் அக்கறை தெரிவித்துள்ளனர்.
ஒருவரது சமய நம்பிக்கையைத் தங்களால் புரிந்து, மதிப்பளிக்க முடிவதாகக் கூறிய சிலர், அதேவேளை பொது இடங்கள் என்றுமே மக்களின் பயன்பாட்டுக்கே உரியதாக இருக்க வேண்டும் என்று நினைவுறுத்தினர்.
சிலைகளை இவ்வாறு வைத்தவர்களுடன் செய்தி நிறுவனம் தொடர்புகொள்ள முயன்றபோது பதிலில்லை.
இருப்பினும், அவ்வீட்டில் இந்திய உடன்பிறப்புகள் இருவர் வசிப்பதாகவும் அவர்கள் பிறருடன் நட்போடு பழகும் இயல்புடையவர்கள் என்றும் அண்டைவீட்டார் ஒருவர் தெரிவித்தார்.
இந்தச் சிலைகளைப் பல ஆண்டுகளாக அவர்கள் அவ்வாறு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலைமை குறித்து விசாரிக்க உள்ளதாக ஜாலான் புசார் நகர மன்றம் கூறியுள்ளது.