ஈசூன் குடியிருப்பாளர்களால் செல்லமாக வளர்க்கப்பட்டு வந்த கிங் காங் என்ற பூனை அண்மையில் கொடூரமாகக் கொல்லப்பட்டது.
பூனையின் கொலை தொடர்பாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கிங் காங் பூனைக்காக அஞ்சலி செலுத்த அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக மே 12ஆம் தேதி ஜெனட் சின் என்னும் ஃபேஸ்புக் பயனீட்டாளர், ஈசூன் ஸ்திரிட் 51ல் உள்ள புளோக் 511Aல் கிங் காங் பூனைக்காக அஞ்சலி செலுத்தும் இடம் உள்ளது என்று பதிவிட்டார்.
அஞ்சலி செலுத்தும் இடத்திற்கு அருகில்தான் மே 9ஆம் தேதி கிங் காங் பூனை மாண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பூனைக்கு வழக்கமாக உணவு கொடுக்கும் நபர்களால் இந்த அஞ்சலி செலுத்தும் இடம் அமைக்கப்பட்டதாகச் சின் தமது பதிவில் குறிப்பிட்டார்.
பூங்கொத்துகள், பூனைக்கான உணவுகள், கிங் காங் பூனையுள்ள படம் ஆகியவை அந்த அஞ்சலி செலுத்தும் இடத்திலிருந்தன.
கிங் காங் பூனைக்கு அஞ்சலி செலுத்த விரும்புபவர்கள் இங்கு வரலாம் என்றும் இது ஒரு வாரம் நடைபெறும் என்றும் சின் பதிவிட்டார்.