பொங்கோல் வட்டாரக் குடியிருப்பாளர்கள் புதிதாக அறிமுகம் கண்டிருக்கும் தானியங்கி இடைவழிப் பேருந்தின் சோதனை ஓட்டத்தில் ஜனவரி 12 முதல் பங்கேற்கலாம்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அந்த ஓட்டுரில்லா வாகனச் சேவையை முழுமையாகச் சேவையில் விடுவதற்கு முன்னர் சோதனை ஓட்டம் நீடிக்கும். அதில் பங்கேற்கும் குடியிருப்பாளர்களின் பயண அனுபவத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் சேகரிக்கும்.
பொங்கோல் பிளாசா வழியாக பொங்கோல் மட்டில்டா கோர்ட்டையும் பெங்கோல் பிளாசாவையும் இணைக்கும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்த தானியங்கி வாகனம் செல்லும்.
பொங்கோல் குடியிருப்புப் பேட்டையின் மேற்குப் பகுதியையும் கிழக்கு வட்டாரத்தையும் அந்தப் பயணம் இணைக்கும்.
தானியங்கி வாகனங்கள் செல்வதற்காக ஏற்படுத்தப்பட்டு வரும் மூன்று பயண வழித்தடங்களில் இதுவும் ஒன்று.
தானியங்கி வாகனங்கள் ஒவ்வொரு பயணத்திலும் 15 நிமிடங்கள் வரை நேரத்தை மிச்சப்படுத்தும்.
சோதனை ஓட்ட காலத்தில் தானியங்கி வாகனத்தில் கட்டணமின்றி பயணம் செய்யலாம். வார நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அது இயங்கும். 15 நிமிட இடைவெளியில் அந்த வாகனங்கள் வந்து செல்லும்.
அடித்தள அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சோதனை ஓட்ட பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்களுக்கு முழுமையாகச் சேவையைத் தொடங்கும் வரை அந்த இலவசப் பயணம் தொடரும்.
சோதனை ஓட்டத்தின்போது அதிகபட்சம் எத்தனை பயணிகள் செல்லலாம் என்பது குறித்து ஆணையம் எந்த ஒரு இலக்கையும் நிர்ணயிக்கவில்லை.
வாகனங்களில் பயணம் செய்வோரிடம் இருந்து கருத்துகளைத் திரட்டி வாகனங்களை இயக்கும் நிறுவனங்களிடம் அளிக்கப்படும். சேவையை அதிகாரபூர்வமாகத் தொடங்குவதற்கு முன்னர் அந்த யோசனைகளைச் செயல்படுத்த அந்நிறுவனங்களுக்கு அந்தக் கருத்துகள் உதவும்.
கருத்துகளைத் திரட்ட, பயணம் தொடங்கும் இடத்திலும் முடியும் இடத்திலும் ஆணையத்தின் தூதுவர்கள் அமர்த்தப்பட்டு இருப்பர்.
சோதனை ஓட்டப் பாதையில் தானியங்கி வாகனங்கள் ஏற்கெனவே பயணிகள் இன்றி 10,000 கிலோமீட்டர் தூரத்தை எந்த ஒரு சம்பவமும் நிகழாமல் வெற்றிகரமாகக் கடந்துள்ளன.
இதர இரு வழிகளில் சோதனை ஓட்டத்தைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
போக்குவரத்துத் துறையின் மனிதவளச் சவால்களை இலகுவாக்கும் பொருட்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் 100 முதல் 150 வரையிலான தானியங்கி வாகனங்களை சிங்கப்பூரில் அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.

