தேசியப் பூங்காக் கழகம் மே மாதத் தொடக்கத்தில் கொல்லப்பட்ட இரண்டு பூனைகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது. ஈசூன், பொங்கோல் வட்டாரங்களில் உள்ள குடியிருப்பாளர்களும் தங்கள் பராமரிப்பில் உள்ள பூனைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
ஈசூனில் கிங் காங் என்றழைக்கப்படும் சமூக பூனை இம்மாதம் 9ஆம் தேதி வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் மாண்டுகிடக்கக் காணப்பட்டது. அதைச் செய்த சந்தேகநபரை அடையாளம் காண உதவுவோருக்கு $500 வெகுமதி வழங்கப்படும் என்று பூனைக்கு உணவளிப்போரில் ஒருவர் தெரிவித்தார்.
வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்களும் பூனைக்கு உணவளிப்போரும் அடிக்கடி அங்குள்ள பூனைகளைக் கண்காணிக்கின்றனர். கிங் காங் பூனையைக் கொலை செய்தவர் பிடிபடும் வரை சிலர் வீடுகளில் பூனைகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
பொங்கோலில் தேசியப் பூங்காக் கழகத்துடன் இணைந்து பாசிர் ரிஸ்- பொங்கோல் நகர மன்றம் விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் மே 15ஆம் தேதி கூறினார். அங்கு ஷேர் கான் என்ற பூனை பல காயங்களுடன் கடந்த 12ஆம் தேதி மாண்டுகிடந்தது.
பூனை நல அமைப்பின் சில உறுப்பினர்கள் ஈசூனிலும் பொங்கோலிலும் உள்ள வீவக புளோக்குகளில் வீடு வீடாகச் சென்று அதிகாரிகளுக்காகத் தகவல்களைச் சேகரிப்பதோடு மக்களிடையே விழிப்புணரவை ஏற்படுத்துகின்றனர்.
ஈசூனில் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கூறும்படி கோரும் பூனை நல அமைப்பு ஒட்டியிருக்கிறது.
பூனைகள் கொல்லப்பட்டதைப் பற்றி பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தனிப்பட்ட விதத்தில் மற்றொரு விலங்குநல ஆர்வலர் திருவாட்டி லிம், கிங் காங் பூனையைக் கொலை செய்த நபரைக் கண்டுபிடிக்க தனியார் புலனாய்வாளரின் உதவியை நாடியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் டெலிகிராம் தளம் மூலம் மக்களுக்கு அவ்வப்போது தகவல் அளித்து வருகிறார்.