மீள்திறன்மிக்க இதயங்களைக் கொண்டாடும் தொலைக்காட்சி நிகழ்ச்சி

2 mins read
259ef6cb-d1cf-4900-b7c8-ef3bcd98f7f1
ஜூன் 3ஆம் தேதி சிங்கப்பூர் இதய அறநிறுவனக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பேராளர்கள், கலைஞர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

இதய நோயாளிகள், பராமரிப்பாளர்கள், தொண்டூழியர்கள், பங்காளிகள் எனச் சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் ஆதரவாளர்கள் அனைவரின் மீள்திறனையும் கெளரவிக்கும் நோக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் 55வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி, அந்நிறுவனத்தின் நான்காவது ‘இதய நல மைய’ (Heart Wellness Centre) மேம்பாடு உட்பட பல்வேறு திட்டங்களுக்கும், முன்னெடுப்புகளுக்கும் நிதி திரட்டவும் திட்டமிடுகிறது.

உள்ளூர் நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கவுள்ள இந்த ‘மீள்திறன்மிக்க இதயங்கள் - சிங்கப்பூர் இதய அறநிறுவன 55வது ஆண்டுவிழா நிதித்திரட்டு நிகழ்ச்சி’, வரும் ஜூன் 29 ஆம் தேதி, மீடியாகார்ப் ஒளிவழி 8ல் மாலை 7 மணி முதல் 10 மணிவரை நேரலையாக ஒளிபரப்பாகும்.

இந்த ஆறாவது நிதித்திரட்டு நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார்.

கடந்த 1998ஆம் ஆண்டு தொடங்கி 2005ஆம் ஆண்டுவரை இவ்வகை நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. 20 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் தற்போது மீண்டும் நடைபெறவுள்ளது.

இதய நோய்த் தடுப்பின் முக்கியத்துவம், இதய நோயாளிகளுக்குச் சிங்கப்பூர் இதய அறநிறுவனம் வழங்கும் மறுவாழ்வுத் திட்டங்கள், வசதி குறைந்த நோயாளிகளுக்கான நிதி உதவி, உயிர்காப்பாளர்கள் நிறைந்த நாட்டை உருவாக்க ‘சிபிஆர், ஏஈடி’ உள்ளிட்ட இதயம் தொடர்பான முதலுதவி சிகிச்சைகளைக் கற்பதன் முக்கியத்துவம் ஆகிய மூன்று அம்சங்கள் குறித்துப் பொதுமக்கள் மேலும் அறிந்து கொள்ள இந்நிகழ்ச்சி துணைபுரியும்.

“சிங்கப்பூரில் இதய நோயால் நாள்தோறும் 23 பேர் உயிரிழக்கின்றனர்,” என்று கூறிய நிறுவனத் தலைவர் பேராசிரியர் டான் ஹுவே சீம், “இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தில் ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்,” என்றார்.

ஆறாவது முறையாக நடைபெறும் இந்த அறஇந்நிகழ்ச்சி குறித்த கூடுதல் விவரங்கள் ஜூன் 3ஆம் தேதி சிங்கப்பூர் இதய அறநிறுவனக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பகிரப்பட்டன.

உடலுக்கும், உணர்வுகளுக்குமான தொடர்பைக் காட்டும் வண்ணம், புகழ்பெற்ற உள்ளூர்க் கலைஞர் ரவி ஜி உட்பட ஐந்து கலைஞர்கள், இதய நல மையத்தின் நோயாளிகளுடன் ஒன்றிணைந்து நடத்தும் ‘பல இன சிம்ஃபனி’ (Multicultural Symphony) இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

நிறுவனத்துக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான தொடர்பைக் காட்டும் நடனமும் இடம்பெறும். நடனக் கலைஞர்களும் சிங்கப்பூர் இதய அறநிறுவனத் தொண்டூழியர்களும் இணைந்து அதை படைப்பர்.

மேலும், இதய நோயில் உடற்பயிற்சிக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தும் ‘டேக்குவாண்டோ’ கலையுடன் கூடிய நடனம், நோயாளிகளின் கதைகளைப் பேசும் இசை, நடன நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள கலைஞர்கள் தங்கள் கருத்துகள், தயாரிப்புகள் குறித்தும் பகிர்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்