ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் சூதாட்டக்கூட உரிமம் மூன்றாண்டுக்குப் பதிலாக ஈராண்டு காலத்திற்கு மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சூதாட்டக்கூடத்தின் பயணத்துறைச் செயல்திறன் திருப்தி அளிக்கவில்லை என்ற நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையம் நவம்பர் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, புதுப்பிப்பு 2025 பிப்ரவரி 6ஆம் தேதி நடப்புக்கு வரும்.
மூன்றாண்டுக்கும் குறைவான காலத்திற்குச் சூதாட்டக்கூட உரிமத்தைப் புதுப்பிப்பது இதுவே முதல்முறை என்று ஆணையப் பேச்சாளர் தெரிவித்தார்.
முக்கியச் சுற்றுலாத் தலமாக ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா அதன் ஒருங்கிணைந்த உல்லாசத் தலத்தை உருவாக்கி, தக்கவைத்து, விளம்பரப்படுத்தியதை அடிப்படையாகக் கொண்டு புதிய உரிமத்துக்கான காலம் நிர்ணயிக்கப்பட்டது. சந்தைத் [Ϟ]தேவை, தொழில்துறை தரநிலை ஆகியவை உள்பட வேறுபல கூறுகளையும் கருத்தில் கொண்டு உரிமத்துக்கான காலம் உறுதிசெய்யப்பட்டது.
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் சுற்றுப்பயணச் செயல்திறன் 2021ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ‘திருப்தியற்ற’தாக இருந்ததாக வர்த்தக, தொழில் அமைச்சர் நியமித்த மதிப்பீட்டுக் குழு கண்டறிந்தது.
சரிசெய்யக்கூடிய, கணிசமான மேம்பாட்டுக்குரிய அம்சங்கள் பல இருந்ததாகவும் அது தெரிவித்தது.
வர்த்தக, தொழில் அமைச்சு, சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், செந்தோசா வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கருத்துகளை ஆணையம் பரிசீலித்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவுக்கான அடுத்த மதிப்பீடு, 2026ஆம் ஆண்டு இடம்பெறும் என்று மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோயுடன் மதிப்பீட்டுக் காலகட்டமும் ஒரேசமயம் அமைந்த நிலையில் ‘மிகக் கணிசமான சவால்களை’ சிங்கப்பூரின் பயணத்துறை எதிர்நோக்கியதாக ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவை இயக்கிவரும் ‘ஜென்டிங் சிங்கப்பூர்’ நிறுவனம், உரிமம் புதுப்பிப்பு தொடர்பில் அறிக்கை விடுத்தது.