இலவச முடிதிருத்தும் தொண்டூழியர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டுகோள்

2 mins read
7fb8cc0c-1f4a-45ef-8cb1-7b9796234d83
முடிதிருத்தம் செய்யும் தொண்டூழியரான 82 வயது ஜென்னி. - படம்: பே யாம் கெங்/ இன்ஸ்டகிராம்

தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பேய் யாம் கெங், தொண்டூழியர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

நவம்பர் 24ஆம் தேதி மாதாந்திர இலவச முடிதிருத்தும் சேவையின்போது, தொண்டூழியரை ஒருவர் குறைகூறியதைத் தொடர்ந்து திரு பே, டிசம்பர் 4ஆம் தேதி வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.

“அவர், அந்த நிகழ்விற்கு அறிமுகமானவர் அல்லர். ஆனால் முடிதிருத்தம் தேவைப்படும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம்,” என்றார் அவர்.

அன்று பிற்பகல் 2.45 முதல் 5.10 மணி வரை எட்டு தன்னார்வ சிகையலங்கார நிபுணர்களால் சேவை செய்யப்பட்ட 57 பேரில் அவரும் ஒருவர்.

திரு பேயின் கூற்றுப்படி, அந்த நபர் தனது முடிதிருத்தம் அசிங்கமாக இருந்தது என்றும் பக்கவாட்டில் சமமாக இல்லை என்றும் கூறியிருந்தார்.

“நாங்கள் நன்றாக வேலை செய்யவில்லை. ஏற்பாட்டாளர்கள் ஆகிய நாங்கள் எங்கள் சிகையலங்கார நிபுணர்களை ஆய்வு செய்திருக்க வேண்டும் என்றும் கூறி அங்கு அவர் ஒரு காட்சியை அரங்கேற்றினார். அவருக்கு முடிதிருத்தம் செய்த ஜென்னியிடம், நீங்கள், ஓய்வு பெற வேண்டும், இதுபோன்ற மோசமான சேவையை வழங்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்,” என்றார் திரு பே.

“திருவாட்டி ஜென்னி, 82, 2014ல் தொடங்கப்பட்ட மாதாந்தர சமூக சேவையில் பங்கேற்ற முதல் சிகையலங்கார நிபுணர். தற்போது இதில் 15 பேர் தொண்டூழியம் செய்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறையும் ஐம்பது முதல் 60 பேருக்கு முடிதிருத்தம் செய்து வருகின்றனர்.

“திருவாட்டி ஜென்னி சமூகத்திற்கு திருப்பியளிப்பதில் நம்பிக்கை கொண்டவர். வீட்டில் செய்த பொருள்களை கொண்டு வந்து தொண்டூழியர்களிடம் பகிர்ந்துகொள்வார்.

தொடர்புடைய செய்திகள்

“தங்களுடைய ஞாயிறு மதிய நேரத்தை குடும்பத்துடன் செலவழிக்காமல் முடிதிருத்தம் செய்யும் தொண்டூழியர்களுக்கு குடியிருப்பாளர்கள் மரியாதை அளிக்க வேண்டும். எல்லாரும் நிபுணரோ முழுநேர முடிதிருத்தும் ஊழியர்களோ அல்லர். ஆனால் அவர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை திறன், அனுபவம் இருக்கிறது. இதயப்பூர்வமாக அவர்கள் பணியாற்றுகின்றனர்,” என்று திரு பே யாம் கெங் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்