நாட்டில் 2023ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான கட்டாய மாதாந்தர ஓய்வுநாள் கொள்கையைப் பெரும்பாலான முதலாளிகள் முறையாகப் பின்பற்றுவதாக மனிதவள அமைச்சு கூறியுள்ளது.
இந்தக் கொள்கை எவ்வாறு அமலாக்கம் செய்யப்படுகிறது என்றும் அது முறையாகச் செயல்வடிவம் பெறுகிறதா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீத் ரசாக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சு, அதிக அளவிலான முதலாளிகள் கட்டாய விடுப்பு வழங்கும் விதிமுறையைப் பின்பற்றியதாக விவரித்தது.
சிங்கப்பூரில் மொத்தம் 300,000 பணிப்பெண்கள் உள்ளனர். கட்டாய ஓய்வுநாள் விதியைப் பின்பற்றாத காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்ட முதலாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஏறத்தாழ 90 மட்டுமே என்று அமைச்சு கூறியது.
இது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த மனிதவள அமைச்சர் டான் சீ லெங், ‘‘இந்தக் கொள்கை பணிப்பெண்களின் நலனுக்குப் பெரிதும் உதவியுள்ளது. 2015ஆம் ஆண்டில் 93 விழுக்காடாக இருந்த பணிப்பெண்களின் மனரீதியான நிறைவு விகிதம், 2021ஆம் ஆண்டு ஆய்வில் 99 விழுக்காடாக அதிகரித்துள்ளது,’’ என்று சொன்னார்.
தற்போது இந்தக் கொள்கையில் மாற்றங்கள் செய்யும் திட்டம் ஏதுமில்லை என்றும் எனினும் இதன் நடைமுறையைத் தொடர்ந்து கண்காணித்து சூழலுக்கு ஏற்ப தேவையான மேம்பாடுகளை அமைச்சு செய்யும் என்றும் டாக்டர் டான் கூறினார்.

