செல்லப்பிராணிகளுக்கான உணவுகளை வழங்காத உணவகங்கள், செல்லப்பிராணிக் கடை உரிமம் இல்லாமல் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிமுதல், செல்லப்பிராணிகளுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்புறங்களில் சேவை அளிக்கலாம்.
இவ்வாண்டு இறுதி நிலவரப்படி, வாடிக்கையாளர்கள் செல்லப்பிராணிகளுடன் உணவருந்துவதை அனுமதிக்க, செல்லப்பிராணிக் கடை உரிமங்கள் வைத்திருக்கும் அத்தகைய 120 உணவகங்கள் இருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
இந்த நடவடிக்கை, உணவுப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான அமைப்பின் வழக்கமான மறுஆய்வின் ஒரு பகுதி என்று அமைப்பு கூறியது. அதோடு, ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 40 வர்த்தகங்கள் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அது சொன்னது.
வெளிப்புற உணவருந்தும் இடங்களில் இருக்கும் விலங்குகளில், ‘ஸூனொட்டிக்’ எனப்படும் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய கிருமிகள் ஏற்படுவதற்கான அபாயம் ஏற்கெனவே குறைவாக உள்ளது.
அதைக் குறைக்க, தற்போதுள்ள உணவுப் பாதுகாப்புத் தகுதிவிதிகள் போதுமானவையாக உள்ளன என்று அமைப்பு கூறியது.
இந்த வெளிப்புற உணவருந்தும் இடங்கள் கட்டடத்திற்கோ, உணவகத்திற்கோ வெளியில் உள்ள மூடப்படாத பகுதிகளாகும்.
இதற்கிடையே, அனைத்து உணவங்காடி நிலையங்களிலும் அவற்றின் வெளிப்புற உணவருந்தும் பகுதிகளிலும் செல்லப்பிராணிகள் செல்வதற்கு இன்னும் தடை உள்ளது. தனியார் உணவு வர்த்தகங்களின் வெளிப்புற இருக்கை இடங்களைப் போல் அல்லாமல், அவை வெவ்வேறு சமூகங்கள் பகிர்ந்துகொள்ளக்கூடிய இடங்கள் என்பதே அதற்குக் காரணம் என்று அமைப்பு கூறியது.
புதிய விதிமுறைகளின்கீழ், செல்லப்பிராணிகளுக்கான உணவுகளைப் பரிமாறத் திட்டமிடும் வர்த்தகங்கள், செல்லப்பிராணிக் கடை உரிமத்திற்காக அமைப்பிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
மனிதர்களுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் ஒரே நேரத்தில் உணவுகளைத் தயாரிக்கும்போது, உணவு மாசுபட வாய்ப்பு உள்ளதே அதற்குக் காரணம் என்று அமைப்பு கூறியது.
இதனால், கூடுதல் உணவுப் பாதுகாப்புத் தகுதிவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அது தெரிவித்தது.


