சமூக ஊடக நேரடிச் செய்திகள், தானியக்கக் காணொளிகளைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பரிசீலனை

சிறாரைப் பாதிக்கக்கூடிய இணைய நடவடிக்கைகளுக்கு எதிரான முயற்சிகள் தீவிரம்

சமூக ஊடக நேரடிச் செய்திகள், தானியக்கக் காணொளிகளைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பரிசீலனை

3 mins read
c6ff2846-bb46-48fb-afb4-70e61c57db82
இணையத் தீங்குகளிலிருந்து சிறாரைப் பாதுகாக்கும் முயற்சிகள் குறித்து ஊடகங்களிடம் பேசினார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூக ஊடக நேரடிச் செய்திகள், அடுத்தடுத்து இயல்பாகக் காணொளிகள் இயங்கும் அம்சம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

சிறாரை இணையத் தீங்குகளிருந்தும் சமூக ஊடகத்திற்கு அடிமையாவதிலிருந்தும் தடுக்கும் வழிகள் ஆராயப்படும் நிலையில் அரசாங்கம் அவை குறித்தும் பரிசீலிக்கிறது.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ அதனைத் தெரிவித்தார். கட்டமைப்புகளின் செயல்பாட்டு அம்சங்களினுடைய பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இன்ஸ்டகிராம், யூடியூப் உள்ளிட்ட ஊடகங்களில் வரும் முடிவற்ற, தானியங்கிக் காணொளி இயக்க அம்சம், திரை நேரத்தை அதிகரித்து, அவற்றுக்கு அடிமையாக்குகிறது எனும் கருத்து பரவலாக உள்ளது. மேலும், சமூக ஊடகங்களில் அங்கீகரிக்கப்படாத கணக்குகளிலிருந்து வரும் பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல், பொருத்தமற்ற உள்ளடக்கங்களுக்குச் சிறார், பதின்ம வயதினர் பலியாகும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.

இந்நிலையில், அதற்கெதிரான பாதுகாப்பு மேம்பாடுகள் குறித்து முக்கியச் சமூக ஊடக நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சு நடத்துவதாக அமைச்சர் தெரிவித்தார். ஒவ்வொரு தளமும் வெவ்வேறு வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதற்குரிய கட்டுப்பாடுகளும் வெவ்வேறு வகையில் அமையும் என்றார் அவர்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இளையர்கள் இவ்வகை தேவையற்ற தொடர்புகளுக்கு ஆளாவது குறித்த பெற்றோரின் கவலையைப் புரிந்துகொள்ள முடிகிறது,” என்று அவர் சொன்னார்.

“நேரடியாக ஒருவர் தொடர்புகொள்வது குறித்து எச்சரிக்க முடியும். ஆனால் இணையவழியில் நடைபெற்றால் பெற்றோர் என்ன செய்ய முடியும்?,” என்று அமைச்சர் வினவினார்.

அவற்றுக்கெதிரான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதற்கு முன் பெற்றோர், இளையர்களின் கருத்துகளை அரசாங்கம் கேட்டறியும் என்றும் அவர் சொன்னார்.

ஆஸ்திரேலியா, இந்தோனீசியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட சிறார், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் சிங்கப்பூர், இந்தச் சிக்கலை அணுகுவதற்கான மாற்று வழிகளைக் கண்காணித்து வருகிறது.

மேலும் டிக்டாக், இன்ஸ்டகிராம் போன்ற செயலிகள் இளம் பயனர்களின் பயன்பாட்டு முறைகளைக் கணித்து அதற்கேற்ப உள்ளடக்கங்களைப் பரிந்துரைக்கும் முறையைத் தடுத்து, அவர்கள் பின்தொடரும் கணக்குகளின் உள்ளடக்கங்களை மட்டும் காட்டச் சொல்லும் நியூயார்க்கின் புதிய சட்டங்களை மேற்கோள் காட்டினார் அமைச்சர் டியோ. நிறுவனங்கள் இதில் எத்தகைய மாற்றங்களைச் செய்கின்றன என்பதையும் சிங்கப்பூர் கவனித்துவருவதாக அவர் கூறினார்.

சிங்கப்பூர், ஏப்ரல் 1 ஆம் தேதிமுதல் 18 வயதிற்குட்பட்டோர் எதைப் பதிவிறக்கம் செய்கிறார்கள் என்பதை ‘ஆப் ஸ்டோர்’ செயலிகள் கண்காணிக்க ஏதுவாக, ஒருவரின் வயதை உறுதிப்படுத்தும் அம்சம் சேர்க்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள ஆவணம், முக வயதுப் பகுப்பாய்வு ஆகியவை மூலம் பயனரின் வயது கண்டறியப்படும்.

“இணையப் பாதுகாப்பு முன்னெடுப்புகள், வயதை உறுதிப்படுத்துவதிலிருந்து தொடங்குவதுதான் மிகச் சரியானது,” என்றார் திருமதி டியோ.

பதின்ம வயதினருக்கான கணக்குகளைக் கொண்டுள்ள ஊடகத் தளங்கள், பயனர்களின் வயதைச் சரிபார்க்க முடியாவிட்டால் சட்டப் பாதுகாப்புகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

வன்முறை, இணையத் துன்புறுத்தல் போன்ற உள்ளடக்கங்களுக்குச் சிங்கப்பூர்ப் பயனர்கள் ஆளாவதைக் குறைப்பதில் ஊடகங்களைப் பொறுப்பேற்கச் செய்யும் தற்போதைய சட்டங்களை இந்தக் கூடுதல் பாதுகாப்பு அடுக்குகள் வலுப்படுத்த உதவும்.

குறிப்புச் சொற்கள்