சிங்கப்பூரில் சில்லறை விற்பனை கடந்த ஏப்ரல் மாதம் அதிகரித்தது.
கடந்த மார்ச் மாதமும் சில்லறை விற்பனை அதிகரித்திருந்தது.
ஆண்டு அடிப்படையில் ஏப்ரலில் சில்லறை விற்பனை 0.3 விழுக்காடு கூடியது. மார்ச்சில் இவ்விகிதம் 1.3 விழுக்காடாகப் பதிவானது.
சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை வியாழக்கிழமை (ஜூன் 5) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வாகன விற்பனையைச் சேர்க்காமல், பருவத்திற்கேற்ப சரிசெய்யப்பட்ட பிறகு மார்ச் மாதத்திலிருந்து சில்லறை விற்பனை 0.2 விழுக்காடு அதிகரித்தது.
ஏப்ரலில் இடம்பெற்ற சில்லறை விற்பனையின் மொத்த மதிப்பு 3.9 பில்லியன் வெள்ளி. இதில் 12.6 விழுக்காட்டுத் தொகை, இணையம்வழி இடம்பெற்ற சில்லறை விற்பனையின் மதிப்பாகும். இவ்விகிதம், மார்ச்சில் பதிவான 13.3 விழுக்காட்டைவிடக் குறைவு.
கணினி, தொலைத்தொடர்புப் பொருள்களின் மொத்த விற்பனையில் 49.8 விழுக்காட்டு விற்பனை இணையத்தில் மேற்கொள்ளப்பட்டவை. அறைகலன், வீட்டு அத்தியாவாசியப் பொருள்கள் ஆகியவற்றின் மொத்த விற்பனையில் 30 விழுக்காட்டு விற்பனைகள் இணையத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பேரங்காடிகள், ‘ஹைப்பர்மார்ட்’ எனப்படும் பெரிய பேரங்காடிகள் ஆகியவற்றில் இடம்பெற்ற விற்பனைகளில் 13.1 விழுக்காடு விற்பனைகள் இணையம்வழி இடம்பெற்றவை.
சில்லறை வர்த்தகத் துறையில் பாதிக்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஆண்டு அடிப்படையில் வளர்ச்சி பதிவானது. கணினி, தொலைத்தொடர்புப் பொருள் விற்பனையில்தான் வளர்ச்சி ஆக அதிகமாக 14.8 விழுக்காடாகப் பதிவானது.