கைப்பேசி, பெட்ரோல் உறுதுணையால் செப்டம்பரில் சில்லறை விற்பனை 1.7% ஏற்றம்

கைப்பேசி, பெட்ரோல் உறுதுணையால் செப்டம்பரில் சில்லறை விற்பனை 1.7% ஏற்றம்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Nov 2026 - 4:20 pm

2 mins read

சிங்கப்பூரில் செப்டம்பர் மாதச் சில்லறை விற்பனை 1.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 0.8 விழுக்காடு ஏற்றம் கண்ட அந்தத் துறை தனது வளர்ச்சியைத் தொடர்ந்ததாகச் சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் போன்றவற்றை விலக்கிவிட்டு கணக்கிட்டால், சில்லறை விற்பனையின் ஏற்றம் 2.5 விழுக்காடு ஆகும்.

ஆகஸ்ட் மாதம் அது 1.7 விழுக்காடாகப் பதிவானது என்று வியாழக்கிழமை (நவம்பர் 5) வெளியிட்ட தனது அறிக்கையில் புள்ளிவிவரத் துறை குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் நடந்த ஒட்டுமொத்தச் சில்லறை விற்பனை $4.3 பில்லியன் என மதிப்பிடப்பட்டது. அதில், இணைய வர்த்தகத்தின் பங்கு 17.7 விழுக்காடு. ஆகஸ்ட் மாத இணைய விற்பனை விகிதமான 15.6 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம்.

கணினி மற்றும் தொலைத்தொடர்புச் சாதனங்களின் சில்லறை விற்பனை ஆண்டு அடிப்படையில் செப்டம்பர் மாதம் 16.5 விழுக்காடாக இருந்தது.

அதேபோல, பெட்ரோல் சேவை நிலையங்களில் 6.5 விழுக்காடு என்ற அளவில் விற்பனை விரிவடைந்தது.

கைப்பேசிகளுக்கான வலுவான தேவையும் அதிகரித்த பெட்ரோல் விலையும் அதற்கான காரணங்கள் எனப் புள்ளிவிவரத் துறை விளக்கியுள்ளது.

அழகுசாதனப் பொருள்கள், குளியலறைப் பொருள்கள் மற்றும் மருத்துவப் பொருள்களின் விற்பனையும் செப்டம்பர் மாதம் ஆறு விழுக்காடு அதிகரித்தது.

மாறாக, சிறு கடைகள் மற்றும் பகுதிவாரிக் கடைகளில் 5.6 விழுக்காடும் பெரிய கடைகளில் 3.4 விழுக்காடும் விற்பனை சரிந்தது.

அதேவேளை, உணவு, பானச் சேவைத் துறையில் ஆண்டு அடிப்படையிலான சில்லறை விற்பனை 1 விழுக்காடு அதிகரித்தது. ஆகஸ்ட் மாதம் 1.8 விழுக்காடு என்று சரிந்திருந்த அந்தத் துறையின் விற்பனை சென்ற மாதம் தலைகீழ் மாற்றத்தைக் கண்டது.

உணவு, பானத் துறையின் ஒட்டுமொத்தச் சில்லறை விற்பனை $1.6 பில்லியன் என மதிப்பிடப்பட்டது. அதில் 21.1 விழுக்காடு இணையம் வாயிலாக நிகழ்ந்தது. ஆகஸ்ட் மாத இணைய விற்பனை 20.9 விழுக்காடாக இருந்தது.

உணவு, பானத் துறையில் இடம்பெற்றுள்ள விரைவு உணவுக் கடைகளில், ஆண்டு அடிப்படையில் 7.6 விழுக்காடு வளர்ச்சி பதிவானது. உணவகங்களில் 2.6 விழுக்காடு விற்பனை அதிகரித்தது. அந்த வரிசையில், காப்பிக் கடைகளின் விற்பனை வளர்ச்சி 0.1 விழுக்காடாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்