சிங்கப்பூரின் சில்லறை விற்பனை ஆண்டு அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டு விழுக்காடு அதிகரித்தது.
அதற்கு முந்தைய மாதம் வளர்ச்சி விகிதம் 0.7 விழுக்காடாகப் பதிவானது.
வாகன விற்பனை வலுவாக இருந்தது செப்டம்பர் மாதத்துக்கான சில்லறை விற்பனை அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாகும். வாகன விற்பனையைக் கருத்தில்கொள்ளாதபோது அம்மாதத்துக்கான சில்லறை விற்பனை ஆண்டு அடிப்படையில் 1.4 விழுக்காடு குறைந்தது. காலகட்டத்துக்கேற்ப பல்வேறு அம்சங்கள் கருத்தில்கொள்ளப்பட்ட பிறகு மாத அடிப்படையிலும் விகிதம் 0.2 விழுக்காடு குறைந்தது.
எனினும், சில்லறை விற்பனை வளர்ச்சி விகிதம், தனியார் துறை பொருளியல் வல்லுநர்களின் கணிப்பை விஞ்சியது. புளூம்பர்க் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் ஆண்டு அடிப்படையில் செப்டம்பருக்கான சில்லறை விற்பனை 1.8 விழுக்காடு அதிகரிக்கும் என்று தனியார் துறை பொருளியல் வல்லுநர்கள் கணித்திருந்தனர்.
காலகட்டத்துக்கேற்ப பல்வேறு அம்சங்கள் கருத்தில்கொள்ளப்பட்ட பிறகு மாத அடிப்படையில் சில்லறை விற்பனை 0.4 விழுக்காடு கூடியது. கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவான 0.8 விழுக்காட்டைக் காட்டிலும் அது குறைவு என்று சிங்கப்பூர் புள்ளி விவரப் பிரிவு (SingStat) செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 5) வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிய வந்தது.
செப்டம்பரில் இடம்பெற்ற மொத்த சில்லறை விற்பனையின் மதிப்பு நான்கு பில்லியன் வெள்ளியாகும். அதில் 13.8 விழுக்காடு இணையம்வழி மேற்கொள்ளப்பட்ட விற்பனைகளின் மதிப்பு.
ஆண்டு அடிப்படையில் சில்லறை விற்பனையில் உள்ள 14 பிரிவுகளில் ஆறு பிரிவுகளில் செப்டம்பர் மாதம் வளர்ச்சி பதிவானது.
ஆக அதிகமாக வாகனப் பிரிவில் சில்லறை விற்பனை வளர்ச்சி 29.6 விழுக்காடாகப் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
அதேவேளை, ஆடை ஆபரணங்கள், காலணிப் பிரிவில் சில்லறை விற்பனை ஆக அதிகமாகச் சுருங்கியது. அப்பிரிவில் சில்லறை விற்பனை 9.3 விழுக்காடு குறைந்தது.

