தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓய்வுபெறும் அமைச்சர்கள், நன்றி சொன்ன தலைவர்கள்

2 mins read
87e9667b-09d4-4662-93e2-3143b46eca87
தற்காப்பு அமைச்சர் இங் என் ஹென்னின்கீழ் (நடுவில் வெள்ளைச் சட்டை) சிங்கப்பூர் ஆயுதப் படை போருக்குத் தயாராக இருந்ததோடு அமைதிக் காலத்திலும் அதன் ஆற்றலை வெளிப்படுத்தியதாகக் கூறியுள்ளார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: சாவ்பாவ்
மக்களின் வாழ்க்கையை உயர்த்தவும் சிக்கலான, சர்ச்சைக்குரிய விவகாரங்களைக் கையாளவும் பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் செயல்பட்டதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் புகழாரம் சூட்டியுள்ளார்.
மக்களின் வாழ்க்கையை உயர்த்தவும் சிக்கலான, சர்ச்சைக்குரிய விவகாரங்களைக் கையாளவும் பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் செயல்பட்டதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் புகழாரம் சூட்டியுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ள டாக்டர் இங் எங் ஹென்னுக்கும் டாக்டர் மாலிக்கி ஓஸ்மானுக்கும் பிரதமர் லாரன்ஸ் வோங் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கும்மேல் அரசியல் அனுபவம் கொண்ட தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக ஏப்ரல் 18ஆம் தேதி அறிவித்தார்.

ஐந்து தவணைக் காலத்திற்கு மனிதவளம், கல்வி ஆகிய துறைகளில் அமைச்சராகப் பொறுப்பு வகித்த டாக்டர் இங்கைப் பாராட்டி பிரதமர் வோங் கடிதம் எழுதியுள்ளார்.

“டாக்டர் இங்கின் தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூர் ஆயுதப் படை போருக்குத் தயாராக இருந்ததோடு அமைதிக் காலத்திலும் தன்னை நிரூபித்தது,” என்ற பிரதமர் வோங், டாக்டர் இங் சிங்கப்பூரைப் பலவிதங்களில் வடிவமைத்துள்ளதையும் சுட்டினார்.

டாக்டர் இங் நெருக்கடிகளைச் சமாளிப்பதில் உறுதியாகவும் பிரச்சினைகளைக் கையாள்வதில் புத்திக்கூர்மையுடன் இருப்பவராகவும் புதிய சாத்தியங்களை உருவாக்க துணிச்சலாக யோசிப்பவராகவும் இருப்பவர் என்று பிரதமர் வோங் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, வெளியுறவு துறைகளுக்கான இரண்டாம் துணையமைச்சருமான டாக்டர் மாலிக்கி ஓஸ்மானுக்கும் பிரதமர் திரு வோங் நன்றியுரைத்துள்ளார்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை அரசியலுக்கு அர்ப்பணித்த டாக்டர் மாலிக்கி அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக திங்கட்கிழமை (ஏப்ரல் 21) அறிவித்தார்.

வெவ்வேறு பரிமாணங்களில் டாக்டர் மாலிக்கி மக்களை ஒன்றிணைத்து வேறுபாடுகளைக் களைவதில் தமது திறனை வெளிப்படுத்தியிருப்பதாக பிரதமர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

வெளியுறவு அமைச்சில் சேவையாற்றிய டாக்டர் மாலிக்கி, சிங்கப்பூரின் நட்பு நாடுகளின் பட்டியலை விரிவுபடுத்தியதோடு அனைத்துலக ஆதரவையும் பெற முயன்றதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, டாக்டர் இங், டாக்டர் மாலிக்கி இருவருக்கும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2001ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த டாக்டர் இங்குடன் நெருக்கமாகப் பணியாற்றியதை அவர் நினைவுகூர்ந்தார்.

“டாக்டர் இங் தெளிவானவர், துரிதமாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்,” என்ற மூத்த அமைச்சர் லீ, தமக்குப் பழக்கமில்லாத அரசியலையும் பொதுக் கொள்கைகளையும் அவர் விரைவில் கற்றுக்கொண்டதாகச் சொன்னார்.

“2004ஆம் ஆண்டு நான் பிரதமராகப் பொறுப்பேற்றபோது டாக்டர் மாலிக்கியை நாடாளுமன்றச் செயலாளராக நியமித்தேன்,” என்ற திரு லீ, உள்ளூரில் சமூகக் கொள்கைகளையும் பாதுகாப்புக் கட்டமைப்புகளையும் வலுப்படுத்த அவர் உதவியதைச் சுட்டினார்.

மக்களின் வாழ்க்கையை உயர்த்தவும் சிக்கலான, சர்ச்சைக்குரிய விவகாரங்களைக் கையாளவும் மலாய் முஸ்லிம் சமூகத்துடனும் டாக்டர் மாலிக்கி இணைந்து செயல்பட்டதாக திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

“சிங்கப்பூருக்கு ஆற்றிய சேவைக்கும் பங்களிப்புக்கும் டாக்டர் இங்கிற்கும் டாக்டர் மாலிக்கிக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்,” என்று மூத்த அமைச்சர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்