சிங்கப்பூர் விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரத்திற்கான வரம்புகள் விரைவில் உயர்த்தப்படலாம்.
இதன்படி, குடியிருப்புக் கட்டடங்களுக்கு 15 மாடிகள் வரையும் தொழிற்துறை, வர்த்தகக் கட்டடங்களுக்கு 9 மாடிகள் வரையும் கட்ட அனுமதிக்கப்படலாம்.
சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமையில் நடந்த அனைத்துலக மதிப்பாய்வின் அடிப்படையில் இந்த முக்கிய மாற்றம் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இம்மாற்றம் நிலத்தை மேலும் சிறப்பாகப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குவதால் இது நிலப்பற்றாக்குறையுள்ள சிங்கப்பூருக்கு மிகவும் முக்கியமானது. இது புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதுடன், ஒட்டுமொத்த வீடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து மேலும் பல சிங்கப்பூரர்களுக்குப் பயனளிக்கலாம்,” என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.
இன்றைய நிச்சயமற்ற உலகச் சூழலில் போட்டித்தன்மையை ஊக்குவித்து, தொழில்துறைக்கு மேலும் நேர்மறையான ஒரு சூழலை உருவாக்க அரசாங்கம் மேற்கொள்ளும் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியே இது.
‘தி பிஸினஸ் டைம்ஸ்’, ‘டிஎச்எல் எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர்’ இணைந்து வியாழக்கிழமை (மே 22) நடத்திய 40வது சிங்கப்பூர் வர்த்தக விருதளிப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நீண்டகாலத் திட்டமிடல், புத்தாக்கச் சிந்தனை, பல்வேறு துறைகளுக்கிடையே பங்காளித்துவம் உலகளாவிய திறந்த நிலைத்தன்மை (global openness) ஆகியவை சிங்கப்பூரின் அடிப்படைகள் என அமைச்சர் குறிப்பிட்டார்.
“வர்த்தகத் தடைகளைக் குறைக்கவோ நீக்கவோ நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் பரிமாற்றங்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
நிலப் போக்குவரத்துத் துறையில் செயல்திறன் மேம்பாடுகள் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில், வாகன நிறுத்தம், கட்டுமானத் திட்டங்களுக்கான அனுமதி தொடர்பான நடைமுறைகளை நிலப் போக்குவரத்து ஆணையம் விரிவுபடுத்தவுள்ளது.
“முன்பு மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டியதிருந்தது. ஆனால் இப்போது, விண்ணப்பித்தவுடனேயே பணிகளைத் தொடங்கலாம். இது மேம்பாட்டாளர்களுக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் துறைக்கும் (built environment industry) நிறைய நேரத்தை மிச்சப்படுத்தும்,” என்றார் அமைச்சர் சீ.
சாலை உள்கட்டமைப்பில் முன்னேற்றங்களையும் எதிர்பார்க்கலாம். பேருந்து நிறுத்தங்களின் கட்டுமான நேரம் 14 வாரங்களிலிருந்து 4 வாரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது ‘மாடுலர்’ தொழில்நுட்பம் எளிமைப்படுத்தப்பட்ட அனுமதி செயல்முறைகளால் சாத்தியமாகியுள்ளது.
“இதே அணுகுமுறையைப் பொது, தனியார் துறை திட்டங்களிலும் பின்பற்ற நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளேன்,” என்றார் அமைச்சர்.
கடல்துறையில், குறைந்த ஆபத்துள்ள வணிகங்களுக்கான பிணை வைப்புத்தொகை நீக்கப்படுகிறது. அத்துடன், பாசிர் பாஞ்சாங்கில் இரவு நேரத்தில் பெரிய படகுகளை இயக்க அனுமதிப்பதன் மூலம் செலவுகள் குறைக்கப்படும்.
மேலும், துறைமுகச் செயல்பாடுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், கடலடிக் கம்பிவட வழித்தடங்களைப் பாதுகாப்பாக அமைக்கவும், சிங்கப்பூர் துறைமுகம் மின்னிலக்கத்திலும் அதே அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறைக்கு உகந்த சூழலை உருவாக்குவதும், பெரிய, சிறிய, நடுத்தர என அனைத்து நிறுவனங்களின் செலவுகளைக் குறைப்பதும் அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சர் சீ தெரிவித்தார்.
“போக்குவரத்து அமைச்சிலோ அல்லது தேசிய வளர்ச்சி அமைச்சிலோ, அமைச்சராக நான் எந்த அமைச்சில் இருந்தாலும் இந்த இலக்கை அடைய என் சகாக்களுடன் இணைந்து தொடர்ந்து செயலாற்றுவேன்,” என்று அமைச்சர் சீ உறுதியளித்தார்.