நகரின் இரு மையப் பகுதிகளை பொழுதுபோக்கு வட்டாரமாக உருமாற்ற பரிசீலனை

நகரின் இரு மையப் பகுதிகளை பொழுதுபோக்கு வட்டாரமாக உருமாற்ற பரிசீலனை

2 mins read
99662969-a945-47d9-9920-19f62e838e33
சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி இயங்கி வந்த 37 எமரால்ட் ஹில் ரோடு வளாகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில், நகரின் மையப்பகுதியில் உள்ள இரு நிலப் பகுதிகள் வாழ்க்கைபாணி நிறைந்த பகுதிகளாக விரைவில் மாற உள்ளன.

பொழுதுபோக்கவும் ஓடியாடி விளையாடவும் மேலும் அதிகமான இடங்களை உருவாக்க நகரத் திட்டமிடல் நிபுணர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆர்ச்சர்ட் ரோடு அருகிலும் மரினா பே வட்டாரத்திலும் அந்த இரு பகுதிகளும் அமைந்துள்ளன.

அவற்றில் ஒன்று, இதற்கு முன்னாள் சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி (SCGS) இருந்த 137 எமரால்ட் ஹில் ரோடு வளாகம்.

அந்த இடம், உணவகங்கள், கடைகள், கலை மற்றும் கலாசாரக் கூடங்கள் இவற்றுடன் தங்கும் வசதியும் நிறைந்த வாழ்க்கைபாணி மையமாக உருமாறக்கூடும்.

மற்றொன்று, ‘மரினா ஒன்’ வட்டாரத்தைச் சுற்றியுள்ள 18 ஹெக்டர் நிலப்பரப்பு.

வருங்கால மேம்பாட்டுக்காக அந்தப் பகுதி குறிக்கப்பட்டு இருந்தாலும், இடைப்பட்ட காலத்தில் விளையாட்டுக்கும் விழாக்கால சந்தைகள் போன்ற பிறவசதிகளுக்கும் அதனைப் பயன்படுத்தும் திட்டம் இருப்பதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்தது.

ஆணையத்தின் வருங்கால பொழுதுபோக்கு பெருந்திட்டத்தை விளக்க யுஆர்ஏ சென்டரில் நடைபெற்று வரும் கண்காட்சியில் இந்த இரு நிலப்பகுதிகளின் வாழ்க்கைபாணி உருமாற்றம் குறித்த திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அந்தத் திட்டங்கள் தொடர்பான பொதுமக்களின் கருத்து வரவேற்கப்படுவதாக ஆணையம் தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி இயங்கிய 137 எமரால்ட் ஹில் ரோடு வளாகம் 2019ஆம் ஆண்டு, ஆணையத்தின் வருங்கால மேம்பாட்டுக்காகப் பாதுகாக்கப்படும் பட்டியலில் வைக்கப்பட்டது.

1.05 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்திருந்த அந்தப் பள்ளி வளாகத்தில் மூன்று கட்டடங்கள் இருந்தன.

பெரிய நுழைவாயில் கூடம் 1925ஆம் ஆண்டும் பள்ளி முதல்வரின் அலுவலகம் 1930ஆம் ஆண்டும் பள்ளி நிறுவனர்களில் ஒருவரான சோங் ஓங் சியாங் பெயரிலான ஒரு கட்டடம் 1956ஆம் ஆண்டும் கட்டப்பட்டவை.

சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி 1994ஆம் ஆண்டு டனெர்ன் ரோட்டுக்கு இடமாறியது.

அதன் பின்னர், பல்வேறு அனைத்துலகப் பள்ளிகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்ட அந்த வளாகம் தற்போது காலியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்