சவால்களைச் சரிக்கட்ட மறுமலர்ச்சி கண்ட பொருளியல் உத்திகள்

சவால்களைச் சரிக்கட்ட மறுமலர்ச்சி கண்ட பொருளியல் உத்திகள்

2 mins read
0a45284b-0698-48d8-8858-ed464392d107
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் வரவுசெலவுத் திட்ட உரை 2026ல், சிங்கப்பூர் நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க, வளர்ச்சி காணக் கைகொடுக்கும் பல்வேறு பொருளியல் உத்திகள் முன்னணி இடத்தைப் பிடித்தன. - கோப்புப் படம்: எஸ்பிஎச்

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய பிரதமர் லாரன்ஸ் வோங்கின்  வரவுசெலவுத் திட்ட உரையில், சிங்கப்பூர் நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க, வளர்ச்சி காணக் கைகொடுக்கும் பல்வேறு பொருளியல் உத்திகள் முன்னணி இடத்தைப் பிடித்தன.

அதிகரிக்கும் வர்த்தக நெருக்கடிகள், தொழில் நிறுவனங்களைத் தொடர்ந்து நடத்துவதில் உள்ள சவால்கள் உள்ளிட்ட அசாதாரண சூழல்கள் ஆகியவை பிரதமரின் உரையில் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டன.

எனினும், சிங்கப்பூர் வர்த்தகங்கள் போட்டித்தன்மையுடன் திகழ,  நம்பிக்கையுடன் முன்னேற பல்வேறு புதுப்பிக்கப்பட்ட சலுகைகள், திட்டங்கள், உத்திகளாக வடிவம் பெற்றுள்ளன.

*வர்த்தகச் செலவினங்களைச் சமாளிக்க 40 விழுக்காடு பெருநிறுவன வருமான வரித் தள்ளுபடி

*குறைந்தது ஓர் உள்ளூர் ஊழியரைக் கொண்டு இயங்கி வரும் நிறுவனங்களுக்கு குறைந்தது $1,500 பலன்.

*மாறிவரும் உலகுடன் தொடர்ந்து இணைந்திட, தடையற்று இயங்கிட சிறிய, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு 70% வரையிலான அதிகளவு மானியம். அவ்வகையில் சேராத நிறுவனங்களுக்கு 50% வரையிலான மானியம்.

*உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த ‘சந்தைத் தயார்நிலை உதவி மானியம்’

*பேரளவிலான வளர்ச்சியைக் காண இலக்கு கொண்டுள்ள நிறுவனங்களுக்கு 1.5 பில்லியன் முதன்மை நிதி ஆதரவுத் திட்டம்.

*சந்தை மேம்பாட்டுத் திட்டத்தை விரிவாக்க $1.5 பில்லியன் ஒதுக்கீடு.

முக்கியத் தொழிற்துறைகளில் தலைமைத்துவத்தை ஏற்படுத்தும் இலக்குடன் ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு (ஆர்ஐஇ2030) திட்டம் பிரதமரின் உரையில் இடம்பிடித்தது.

தொழில் நடத்தும் நிறுவனங்களுக்கான கட்டமைப்பை வலுப்படுத்த இத்திட்டம் துணைபுரியும் என்றார் பிரதமர்.

‘’உற்பத்தி, விநியோகம், வான்வெளி, உயிர்மருத்துவம் உள்ளிட்ட முக்கிய தொழிற்துறைகளில் தலைமைத்துவத்தை எழுப்பிட, தொழில்நுட்பம் இன்றியமையாதது. எனவேதான் ‘ஆர்ஐஇ2030’ திட்டத்தில் $37 பில்லியன் முதலீடு செய்கிறோம்,’’ என்று குறிப்பிட்டார் 

மாறிவரும் உலகில் வளர்ச்சி கடினமானதாக இருந்தாலும்  அதிகளவிலான, விரைவான, வளர்ச்சியை நோக்கி முன்னேறுவோம்  என்று பிரதமர் அறைகூவல் விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்