அதிகரிக்கும் வெப்பத்தைச் சமாளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் புதிய திட்டங்கள்

அதிகரிக்கும் வெப்பத்தைச் சமாளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் புதிய திட்டங்கள்

3 mins read
8514e205-0164-4917-b0f2-dd4a80656b76
தோ பாயோ நார்த்தில் மேற்கூரையுடன்கூடிய நடைபாதைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. - படம்: கு. காமராஜ்

சிங்கப்பூரில் வெப்பம் அதிகரித்துவருவதால் இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது தொகுதி மக்களுக்கு உதவப் பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுகின்றனர்.

மேற்கூரையுடன்கூடிய நடைபாதைகளையும் பயணிகளை இறக்கிவிடும் இடங்களையும் சிறிய காடுகள் போன்ற பசுமைப் பகுதிகளை அதிகரித்தல், முதியோருக்கும் வருமானம் குறைந்த குடும்பத்தினருக்கும் உதவுதல் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் போ லி சான், தமது தொகுதியில் அதிகக் கூரை போடப்பட்ட நடைபாதைகள், பயணிகளை இறக்கிவிடும் இடங்கள் போன்றவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

பழைய தொகுதியாக இருப்பதால் வெப்பத்தால் அதிகப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெப்பத்தைத் தணிக்கச் சிறிய காடுகள் போன்ற வசதிகளைச் செய்வது குறித்தும் தமது தொகுதி ஆராய்வதாக அவர் தெரிவித்தார்.

நகர்ப்புறப் பகுதியில் சிறிய, அடர்த்தியான பசுமைப் பகுதிகளை அமைப்பது திட்டமாகும்.

இவை, சுற்றுப்புற வெப்பத்தைத் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக சிரமப்படுவதால் குடியிருப்பாளர்களுக்கு மேலும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் இத்தகைய முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தாம் நினைப்பதாகவும் திருவாட்டி போ கூறினார்.

அதிகரித்துவரும் வெப்பம் காரணமாக இங்கு மக்களுக்குச் செய்யப்படும் வசதிகள் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களில் அவரும் ஒருவர்.

பருவநிலை மாற்றத்தால் உலகளாவிய வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூரில் பதிவான ஆக வெப்பமான பத்து ஆண்டுகளில் 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்தவை. சென்ற ஆண்டில் (2025) சராசரி வெப்பநிலை 28.1 டிகிரி செல்சியஸ். இது, எட்டாவது வெப்பமான ஆண்டாக இருந்தது.

மேலும் சிங்கப்பூர், கடந்த ஒரு வாரமாக வழக்கத்திற்கு மாறான வறண்ட வானிலையை எதிர்கொண்டு வருகிறது. இதன் விளைவாக வெப்பம் அதிகரிக்கிறது. சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம், மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் பெரும்பாலான நாள்களில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று முன்னதாகக் கணித்திருந்தது.

இந்த நிலையில் இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளில் உள்ள முதியவர்கள் அல்லது வாடகை வீடுகளில் வசிக்கும் குறைந்த வருமானக் குடும்பத்தினக்கு உதவ முன்னுரிமை அளித்து வருகின்றனர்.

செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர் டிங் ரூ, பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மின்விசிறிகளை வாங்குவதையும் அதிகரித்துவரும் வெப்பம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் யோசனைகளை செயல்படுத்துவதையும் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.

செங்காங் நகர மன்றம், அதன் குடியிருப்புக் கட்டடங்களுக்கு வெப்பத்தைக் குறைக்கும் வண்ணச் சாயங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு ஷான் ஹுவாங் தமது குழுவினர் வாடகை வீடுகளுக்குச் சென்று மின்விசிறி போன்ற வசதிகள் இருப்பதை உறுதிசெய்து வருவதாகத் தெரிவித்தார்.

“பெரும்பாலான வாடகை வீடுகளில் குளிர்சாதன வசதிகள் இல்லை. இதனால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் அதிகம் கவனிக்கப்பட வேண்டியவர்கள்,” என்று கூறிய ஷான் ஹுவாங், தாமான் ஜூரோங்கைச் சுற்றி 800 வாடகை வீடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

தோ பாயோவிலும் வெப்பத்தைச் சமாளிக்கப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தோ பாயோ நார்த்தில் மக்கள் எளிதாகச் சாலையைக் கடந்துசெல்லக் கூரை போடப்பட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கூரையுடன்கூடிய நடைபாதைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்