சிங்கப்பூரில் 20களிலும் 30களிலும் இருக்கும் இளையர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழும் போக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.
இளம்பெண்களைப் பொறுத்தவரை, 25 முதல் 29 வயதிற்குட்பட்டோரில் தனித்து வாழ்வோரின் விகிதம் 2020ஆம் ஆண்டில் 69 விழுக்காடாக இருந்தது. 2025ல் அவ்விகிதம் 73.4 விழுக்காடாக உயர்ந்தது.
அதே வயதுப் பிரிவைச் சேர்ந்த ஆண்களில் அவ்விகிதம் 81.6 விழுக்காட்டிலிருந்து 85.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
ஆண்களிடையே 30 முதல் 34 வயதுப் பிரிவினரிடம்தான் இந்த மாற்றம் மிக அதிகமாக, அதாவது 41.9 விழுக்காட்டிலிருந்து 47.6 விழுக்காடாக உயர்வுகண்டுள்ளது.
புள்ளிவிவரத் துறை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) வெளியிட்ட ‘2025ஆம் ஆண்டிற்கான பொதுக் குடும்பக் கருத்தாய்வு அறிக்கை’யில் இத்தரவுகள் இடம்பெற்றுள்ளன.
சீன இனத்தவருடன் ஒப்பிடுகையில், இந்திய மற்றும் மலாய் சமூகத்தினரிடையே அதிக வயதில் திருமணம் செய்யும் அல்லது தனித்து வாழும் போக்கு குறைவாகவே உள்ளது.
2025ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, 30 முதல் 39 வயதுடைய சீன ஆண்களில் 38 விழுக்காட்டினரும், பெண்களில் 30.7 விழுக்காட்டினரும் தனித்து வாழ்கின்றனர்.
இருவரும் வேலைக்குச் செல்வது அதிகரிப்பு
கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் ‘இரட்டை வருமானக் குடும்பங்களின்’ விகிதம் 52.5 விழுக்காட்டிலிருந்து 56.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, 35 முதல் 49 மற்றும் 50 முதல் 64 வயதுடைய இணையரிடையே இந்த வளர்ச்சி அதிகமாகப் பதிவாகியுள்ளது. அதே வேளையில், கணவர் மட்டும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
திருமணம் செய்துகொண்டு, கணவன், மனைவி, குழந்தைகள் என வாழும் குடும்பங்களின் விகிதம் 50.4 விழுக்காட்டிலிருந்து 47.6 விழுக்காடாகச் சரிந்திருந்தாலும், சிங்கப்பூரின் முதன்மையான குடும்பக் கட்டமைப்பாக அதுவே நீடிக்கிறது.
கல்வித் தகுதியில் மேம்பாடு
சிங்கப்பூர் மக்களின் கல்வித்தகுதி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 25 வயதிற்கு மேற்பட்டோரில் உயர்கல்வித் தகுதி உடையவர்களின் விகிதம் 64.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சீன, மலாய், இந்தியச் சமூகங்களில் உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
வீடுகளில் முதன்மொழியாக ஆங்கிலம் பேசுவோரின் விகிதம் 48.3 விழுக்காட்டிலிருந்து 58.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இருப்பினும், ஆங்கிலம் பேசும் மக்களில் 80.5 விழுக்காட்டினர் தமிழ் உள்ளிட்ட தங்களது தாய்மொழியையும் வீட்டில் பயன்படுத்தி வருகின்றனர். 2020ல் 2.5 விழுக்காடாக இருந்த வீட்டில் அதிகமாக ஆங்கிலம் பேசும் தமிழ்க் குடும்பங்களின் எண்ணிக்கை து 2025ல் 2.2 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
15 வயதிற்கு மேற்பட்டோரின் எழுத்தறிவு 98.6 விழுக்காடாக உள்ள நிலையில், 45 வயதிற்குட்பட்டோரில் பத்தில் ஒன்பது பேரால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைப் படிக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

