மின்சாரத்தில் இயங்கும் ‘வால்வோ இஎக்ஸ்30 அல்ட்ரா’ வகை கார்களை வைத்திருப்போர், அவ்வாகனத்தை 70 விழுக்காட்டிற்குமேல் மின்னூட்டம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 143 பேர் அவ்வகை கார்களைப் பயன்படுத்தி வருவதாகவும் மின்னூட்டி குறைபாடு தொடர்புடைய தீவிபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த இடைக்காலத் தீர்வை சுவீடனின் வால்வோ நிறுவனம் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை அந்நிறுவனம் கண்டறிந்து வருகிறது.
நிரந்தரத் தீர்வு கிடைத்தவுடன் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் கார்களை மீட்டுக்கொள்ளும் நடவடிக்கை தேவைப்பட்டால் அவர்களுக்கு அதுகுறித்து அறிவுரை வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியது.
உலக அளவில் அக்கார்களைக் கிட்டத்தட்ட 33,777 பேர் வைத்திருப்பதாகவும் அவற்றில் ஏழு வாகனங்கள் அப்பிரச்சினையால் தீவிபத்தில் சிக்கியதாகவும் கூறப்பட்டது.
இருப்பினும், அச்சம்பவங்களில் யாரும் காயமடையவில்லை என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் வால்வோ தெரிவித்தது.
சிங்கப்பூரில் இதுவரை அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“அரிதான சந்தர்ப்பங்களில், அதிக அளவில் மின்னூட்டம் செய்யும்போது காரில் இருக்கும் மின்னூட்டி அதிக வெப்பமடையக்கூடும். மிகவும் மோசமான சூழலில், அது தீப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது,” எனச் சிங்கப்பூரில் வால்வோ வாகன விற்பனையில் ஈடுபட்டுள்ள ‘வேர்ன்ஸ் ஆட்டோமோட்டிவ்’ நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அப்பிரச்சினை குறிப்பாக இஎக்ஸ்30 வகையைச் சேர்ந்த 200 கிலோ வாட் கார்களைப் பாதிக்கிறது. மேலும், சிங்கப்பூரில் விற்கப்படும் அவ்வகையைச் சேர்ந்த 100 கிலோ வாட் கார்களில் எந்தக் குறைபாடும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் தற்போது அறிவிப்புக் கடிதங்களை அனுப்பி வருகிறது.


