தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விபத்தில் குழந்தை மரணம்: பணிப்பெண்மீது குற்றச்சாட்டு

2 mins read
cd3dcc2b-23d2-4ab8-906a-fff367dffda4
ரிவர் வேலி விபத்தில் மாண்ட ஸாரா மெய் ஒல்ரலிச். - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

ரிவர் வேலி வட்டாரத்தில் நிகழ்ந்த விபத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழந்ததன் தொடர்பில் கவனமின்றிச் செயல்பட்டதாக புதன்கிழமையன்று (நவம்பர் 6) இந்தோனீசியப் பணிப்பெண் ஒருவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

32 வயது லிலியானா இவா எனும் அந்தப் பணிப்பெண், கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதியன்று மாலை ஐந்து மணிக்கு முன்பு அக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாண்ட ஸாரா மெய் ஒல்ரலிச் எனும் சிறுமியின் பாதுகாப்பை லிலியானா உறுதிப்படுத்தவில்லை என்று நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது. சிறுமியைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொள்ளாமல் சமிக்ஞை இல்லாத சாலையைக் கடந்ததாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.

அதன் காரணமாக சிறுமி ஓடியபடி சாலையைக் கடந்தார் என்றும் கார் ஒன்று மோதியதால் அவர் கடுமையாகக் காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அன்றைய நாளே அச்சிறுமி உயிரிழந்தார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸாரா, லிலியானாவுடன் தான் பயின்ற பாலர் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்ததாக மரண விசாரணை அதிகாரி எடி தாம் கடந்த ஜூலை மாதம் தெரிவித்தார்.

ஸாரா, இலியானாவிடமிருந்து சற்று தள்ளி நடந்துசென்றார். அப்போது இலியானா, பள்ளிப் பைகளை ஏந்திக்கொண்டு ஸாராவின் இரண்டு வயது சகோதரியின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார்.

ரிவர் வேலியில் உள்ள இன்ஸ்டிடியூ‌ஷன் ஹில் பகுதியை ஸாரா ஓடியபடி கடந்தார். தனது இடப்பக்கத்திலிருந்து கார் ஒன்று வந்ததை அவர் கவனிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கார் நெருங்கியதை இலியானா கண்டபோது ஸாராவைக் காப்பாற்றப் போதிய நேரம் இல்லை என்று திரு தாம் குறிப்பிட்டார். அதற்குள் கார் ஸாராமீது மோதி, அவர்மீது ஏறிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து, கார் ஓட்டுநரான 40 வயது ஆஸ்திரேலிய மாது கைது செய்யப்பட்டார். ஆனால், அவராலும் ஸாரா சாலையைத் தாண்டி ஓடியதைப் பார்த்திருக்க முடியாது என்று திரு தாம் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்