அண்மையில் ரிவர் வேலி வட்டாரத்தில் உள்ள கடைவீட்டில் தீ மூண்டதில் 10 வயது சிறுமி மாண்டார்.
ஆஸ்திரேலியரான ஃபிரேயா ஜி யினானின் இறுதிச் சடங்கு தெம்பினிஸ் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) நடந்தேறியது.
சிங்கப்பூர் ஃபியூனரல் பார்லரில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் ஃபிரேயாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.
அங்கு ஃபிரேயாவுக்கு நினைவேந்தல் நடத்தப்பட்டது.
வெள்ளைச் சாமந்திப் பூக்கள், ரோஜா மலர்கள் ஆகியவற்றால் அவரது படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அவர் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக் கேடயத்துக்கு பக்கத்தில் இளஞ்சிவப்பு நிற முயல் பொம்மை வைக்கப்பட்டிருந்தது.
காலை 10.30 மணி அளவில் இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தை மூதாட்டி ஒருவர் அடைந்தார்.
ஃபிரேயாவின் படத்தைப் பார்த்து அவர் நிலைகுலைந்து தரையில் விழுந்து கதறி அழுதார்.
தொடர்புடைய செய்திகள்
குடும்ப உறுப்பினர்களும் அவரைச் சுற்றிக்கொண்டனர்.
அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்தபடி அழுதனர்.
ஃபிரேயாவின் மரணம் குறித்து தெரியவந்ததும் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்ததாக மாண்ட சிறுமியின் உறவினர் என்று தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட ஆடவர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மூதாட்டி ஒருவர் தம்மை ஃபிரேயாவின் தாய்வழிப் பாட்டி என அடையாளப்படுத்திக்கொண்டார்.
ஃபிரேயா தம்முடன் வசித்து வந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆனால் அவரும் கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.
ரிவர் வேலி கடைவீட்டில் தீ பற்றி எரிந்ததில் 23 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு பேரும் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட 16 சிறுவர்களும் காயமடைந்தனர்.
மூன்றாவது மாடி சன்னல் விளிம்பிலிருந்து மீட்க கட்டுமானத்துறை ஊழியர்கள் உதவினர்.
தீச்சம்பவம் நிகழ்ந்த 278 ரிவர் வேலி சாலையில் சிறுவர்களுக்கான சமையல் பள்ளி ஒன்று இயங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.