ரிவர் வேலி சாலை கடைவீட்டில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) ஏற்பட்ட தீச்சம்பவத்தில் காயமுற்றவர்களில் ஒருவரான இந்திய அரசியல் தலைவர் பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கரின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் கூறியதாக ஜனசேனா கட்சி தெரிவித்துள்ளது.
ஏழு வயது மார்க்கிற்கு கைகளிலும் கால்களிலும் காயம் ஏற்பட்டதாக ஆந்திர துணை முதல்வரான திரு கல்யாண் வழிநடத்தும் ஜனசேனா கட்சி புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்தது.
மார்க்கின் மூச்சுக்குழாயின் நிலையைக் கண்டறிய மருத்துவக் குழு ‘ப்ரோன்கோஸ்கோபி’ செயல்முறையை நடத்தியது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய திரு கல்யாண், தீச்சம்பவத்தில் சிக்கிய சிறுவர்களைக் காப்பாற்றிய கட்டுமான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மார்க்கின் உடல்நிலை குறித்து கேட்டறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தம்மை அழைத்ததாக அவர் கூறினார்.
இந்தத் தீச்சம்பவத்தில் 10 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்; மார்க் உட்பட 21 பேர் காயமுற்றனர்.