ஜாலான் புக்கிட் மேராவில் சாலை விபத்து: உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர் கைது

ஜாலான் புக்கிட் மேராவில் சாலை விபத்து: உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர் கைது

1 mins read
6fe64e28-4c2c-43a0-af59-5ec6d3923add
வேனின் பின்பக்கம் சேதமாகியிருப்பதை விபத்து நடந்த ஏப்ரல் 17ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பார்க்க முடிந்தது. - படம்: சாவ்பாவ் வாசகர்

ஜாலான் புக்கிட் மேராவில் நடந்த விபத்து ஒன்றில் தொடர்புடைய 27 வயது ஆடவர், முறையான ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்.

அந்த ஆடவர் சம்பந்தப்பட்ட விபத்து, ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நடந்தது.

சம்பவம் நடந்த நாளில் காரும் வேனும் மோதிக் கொண்டது குறித்துத் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

விபத்தில் சிக்கிய வெள்ளை நிறக் காரின் முன்பக்கம் சேதமடைந்திருப்பதையும் வேனின் பின்பகுதி நசுங்கியிருந்ததையும் சம்பவம் சார்ந்த புகைப்படங்களில் காண முடிந்தது.

அப்பகுதியில் வசிக்கும் 28 வயது குடியிருப்பாளரான சான், சீன நாளிதழான சாவ்பாவ்விடம், பலத்த சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்ததாகவும் அவரைப் போலவே அக்கம் பக்கத்தினர் பலரும் விபத்து நடந்த இடத்தில் கூடியதாகவும் கூறினார்.

மேலும், “அந்த விபத்தால் இரு சாலை வழித்தடங்களும் முடங்கின. அதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது,” எனத் திரு சான் தெரிவித்தார்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்