நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறும் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் நெடுந்தொலைவு ஓட்டத்தை முன்னிட்டு, போட்டியின் ஏற்பாட்டாளர்களான ஐயன்மேன் குருப் நிறுவனம் சாலை மூடல்கள் பற்றியும் போக்குவரத்து ஏற்பாடுகள் பற்றியும் அறிவித்துள்ளது.
நிக்கல் விரைவுச்சாலை, தேசிய விளையாட்டரங்கம், பீச் ரோடு, மரினா பொலிவார்ட், மத்திய வர்த்தக வட்டாரம் (சிபிடி) உள்ளிட்ட நகரின் சில பகுதிகள் மூடப்படும்.
தெமாசெக் அவென்யூ, பீச் ரோடு, நிக்கல் ஹைவே எம்ஆர்டி நிலையம் முதலிய பகுதிகளில் உள்ள சில கட்டடங்களுக்கு அருகில் வாகனங்கள் செல்ல, பயணிகளை ஏற்றி, இறக்கி விடுதல் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.
நவம்பர் 30, டிசம்பர் 1ஆம் தேதிகளில் பேருந்துத் தடங்கள், சாலை மூடல்களால் அதன் 27 பேருந்துச் சேவைகள் பாதிக்கப்படும் என்றும் எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்துள்ளது.
நவம்பர் 29ஆம் தேதி கிட்ஸ் டாஷ் போட்டியுடன் மூன்று நாள் நிகழ்வு தொடங்கும். மறுநாள் 5 கிமீ, 10 கிமீ ஓட்டங்கள் நடைபெறும். 2021க்குப் பிறகு முதல் முறையாக ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் நெடுந்தொலைவு ஓட்டத்துக்குத் திரும்பும் எக்கிடேன் (Ekiden) அஞ்சல் பந்தயத்துடன், அரை நெடுந்தொலைவு ஓட்டமும், முழு நெடுந்தொலைவு ஓட்டமும் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும்.
2024ஆம் ஆண்டு போட்டிக்கான புதிய முடிவு இடம் இருக்கும். பங்கேற்பாளர்கள் தேசிய விளையாட்டரங்கத்துக்குப் பதிலாக ஆண்டர்சன் பாலத்தில் தங்கள் ஓட்டங்களை முடிப்பார்கள். ஏனெனில், 55,000 பேர் அமரக்கூடிய தேசிய விளையாட்டரங்கம் டிசம்பர் 8ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை ஆசியான் மிட்சுபிஷி எலக்ட்ரிக் கிண்ணம் நிகழ்ச்சிக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் நெடுந்தொலைவு ஓட்டம் 2024க்கான புதுப்பிக்கப்பட்ட பாதைகள், ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மறக்கமுடியாத பந்தயத்தை வழங்குவதற்காக முக்கிய பங்காளிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் கவனமாக திட்டமிடப்பட்டுள்ளது,” என்று ஐயன்மேன் குருப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெஃப் எட்வர்ட்ஸ் தெரிவித்தார்.
“இந்த நிகழ்ச்சிகளைத் திட்டமிடும்போது அனைவரின் பாதுகாப்பும் முக்கிய முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளப்படும். மேலும் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் நெடுந்தொலைவு ஓட்டம் 2024, உலகத் தரம் வாய்ந்த பந்தயத்தின் உற்சாகம், சிங்கப்பூரின் அழகிய காட்சிகள் ஆகிய இரண்டையும் கொண்டாடும் நிகழ்வுக்கு உலகம் முழுவதிலுமிருந்து பங்கேற்பாளர்களை வரவேற்கக் காத்திருக்கிறது,” என்று திரு எட்வர்ட்ஸ் மேலும் கூறினார்.

