சாலை விபத்துகளில் மூத்தோர் உயிரிழப்பது அதிகரிப்பு

சாலை விபத்துகளில் மூத்தோர் உயிரிழப்பது அதிகரிப்பு

2 mins read
60e4c709-c32f-45c6-8384-f2ab948aef78
சிங்கப்பூரில் சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்து. - கோப்புப் படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் காணப்படாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு போக்குவரத்துச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 141ஆகப் பதிவானது. 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 149ஆகப் பதிவானது. 2024ல் எண்ணிக்கை 142ஆக இருந்தது.

அதேபோல் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2024ல் காயமடைந்தோர் எண்ணிக்கை 9,342ஆகப் பதிவானது. அந்த எண்ணிக்கை 2025ல் 9,955ஆகக் கூடியது.

அதிலும், சாலை விபத்துகளில் மூத்தோர் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளது குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். 2024ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்த மூத்தோரின் எண்ணிக்கை 11ஆகப் பதிவானது. 2025ல் அந்த எண்ணிக்கை இரு மடங்குக்கும் மேல் கூடி 27ஆகப் பதிவானது. உயிரிழந்தோர் அனைவரும் பாதசாரிகள்.

பிரச்சினையைக் கையாள போக்குவரத்துக் காவல்துறை அமலாக்க நடவடிக்கைகளை முடுக்கிவிடத் திட்டமிட்டுள்ளனர். சிவப்பு நிற சமிக்ஞை கேமராக்கள் இருக்கும் இடத்தில் வேகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவற்றில் அடங்கும்.

ஒவ்வோர் ஆண்டுக்குமான போக்குவரத்துப் புள்ளிவிவரங்களை வெளியிடும்போது போக்குவரத்துக் காவல்துறை இத்தகவல்களை வெளியிட்டது. 2025க்கான புள்ளிவிவரங்கள் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) வெளியிடப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரின் சாலைகள் தொடர்ந்து மோசமடைந்து வருவது கவலை தரும் ஒன்று எனப் போக்குவரத்துக் காவல்துறை குறிப்பிட்டது.

வேக உச்சவரம்புக்கு அதிகமான வேகத்தில் வாகனம் ஓட்டிப் பிடிபட்டோரின் எண்ணிக்கையும் கூடியது. 2024ஆம் ஆண்டில் அத்தகைய 201,358 ஓட்டுநர்கள் பிடிபட்டனர். 2025ல் அந்த எண்ணிக்கை 253,550க்கு அதிகரித்தது.

நல்ல வேளையாக, வேக உச்சவரம்பை மீறியதால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 2024ல் பதிவான 547லிருந்து 2025ல் 515க்குக் குறைந்தது. அதேபோல், வேக உச்சவரம்பை மீறியதால் மரணம் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கையும் 2024ஆம் ஆண்டுப் பதிவான 46இருந்து 2025ல் 41க்குக் குறைந்தது.

எனினும், சிவப்பு சமிக்ஞையைத் தாண்டிச் செல்லும் சம்பவங்களின் எண்ணிக்கை 2024ல் பதிவான 96லிருந்து 2025ல் 122ஆக அதிகரித்தது. அதனால் சென்ற ஆண்டு ஏழு மரணங்கள் ஏற்பட்டன. இந்த எண்ணிக்கை, 2024ல் பதிவானதைவிட ஒன்று அதிகமாகும்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிப் பிடிபட்டோரின் எண்ணிக்கை 1,799லிருந்து 1,716க்குக் குறைந்தது. இருந்தாலும் போக்குவரத்துக் காவல்துறை தொடர்ந்து இந்த விவகாரத்துக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகளின் காரணமாக 2024, 2025 ஆண்டுகளில் மரண எண்ணிக்கை 12ஆகப் பதிவானது.

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வாகனங்களில் சுமார் 15 விழுக்காட்டு வாகனங்கள் மட்டுமே மோட்டார் சைக்கிள்கள். அப்படியிருந்தும் சாலை விபத்துகளில் 54.8 விழுக்காடு, மோட்டார் சைக்கிளோட்டிகள், அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்டதாக இருந்தன. மேலும், சாலை விபத்துகளில் மாண்டோரில் 53 விழுக்காட்டினர் மோட்டார் சைக்கிளோட்டிகள் அல்லது பயணிகள்.

சாலை விபத்துகளுக்கு மக்கள் பலியாவதைத் தவிர்க்க, உள்துறை அமைச்சும் போக்குவரத்துக் காவல்துறையும் கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் வேக உச்சவரம்பை மீறுவோருக்குக் கூடுதல் தண்டனைகளை அமல்படுத்தியுள்ளன.

மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள், குழந்தைகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் ஆகியவற்றுக்கான பாதுகாப்புத் தரநிலைகளைப் போக்குவரத்துக் காவல்துறை உயர்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விபத்துசாலைகாவல்துறை