இயந்திர மனிதக்கருவிகளும் செயற்கை நுண்ணறிவும் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், பிஞ்சு உள்ளங்களில் அதுகுறித்த அறிவை இப்போதே வளர்த்திட சிங்கப்பூர் அறிவியல் நிலையம் ரோபோஃபெஸ்ட் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ரோபோஃபெஸ்ட் 2026: மீட் டுமோரோ, டுடே (RoboFest 2026: Meet Tomorrow, Today) என்ற நான்கு நாள் நிகழ்ச்சி பிள்ளைகளுக்கு இயந்திர மனிதக்கருவிகளையும் செயற்கை நுண்ணறிவையும் அறிமுகம் செய்யவிருக்கிறது.
முதன்முறையாக இத்தகைய நிகழ்ச்சியை நடத்தும் சிங்கப்பூர் அறிவியல் நிலையம் அனைத்து வயதுப் பிள்ளைகளுக்குமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
ஏப்ரல் 9ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதிவரை நடைபெறும் ரோபோஃபெஸ்ட் நிகழ்ச்சியில் பல மாறுபட்ட கண்காட்சிகளைக் காணமுடியும்.
மல்யுத்தம் செய்யும் இயந்திர மனிதக்கருவிகள், தீயணைப்புச் சவால்களை மேற்கொள்ளும் இயந்திர நாய்கள், இயந்திர மனிதக்கருவிகளின் நகைச்சுவைப் படைப்புகள் ஆகியவை நிகழ்ச்சியில் அடங்கும்.
தொடக்கப்பள்ளி மாணவர்களும் இளையர்களும் இயந்திர மனிதக்கருவிகளை உருவாக்கிப் பார்க்கவும் வாய்ப்புகள் உண்டு.
இயந்திர மனிதக்கருவிகளும் செயற்கை நுண்ணறிவும் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஓர் அம்சமாக மாறிவிட்டது என்றார் சிங்கப்பூர் அறிவியல் நிலைய வாரியத் தலைமை நிர்வாகி தாம் மன் சீ.
ஒருசிலருக்கு அவை புரியாத புதிராக இருக்கலாம். வேறுசிலர் அதனால் அச்சப்படலாம். புரியாத ஒன்றைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு ரோபோஃபெஸ்ட் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் திருவாட்டி தாம்.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் ஒவ்வொரு இயந்திரத்துக்கும் பின்னால் மனிதனின் செயல்பாடு உள்ளது என்பதைத் திருவாட்டி தாம் சுட்டினார்.
செயற்கை நுண்ணறிவை எப்படிப் பொறுப்புடன் பயன்படுத்துவது என்பது பற்றியும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்படும்.
இளம் மனங்களில் செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை விதைக்க நிகழ்ச்சி கைகொடுக்கிறது என்றார் திருவாட்டி தாம்.
மேல் விவரங்களுக்கு str.sg/8NTb என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

