ரயில் நிலையத்தில் உதவிக்கரம் நீட்டிய இயந்திர மனிதன்

ரயில் நிலையத்தில் உதவிக்கரம் நீட்டிய இயந்திர மனிதன்

3 mins read
ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் நடைபெற்ற இயந்திர மனிதன் சோதனை
1c65091f-d4c2-4027-b88c-57e92f704688
இரட்டையர் முஹாபிஸ், முஹைமின்னுக்கு வழிகாட்டிய ‘ஆலி’ இயந்திர மனிதன். - படம்: ரவி சிங்காரம்

எதிர்காலத்தில் ரயில் நிலையங்களில் வழி தெரியாமல் தவிக்கும்போது இயந்திர மனிதனிடம் உதவி கேட்கும் சூழல் வரலாம். 

அதற்கு அடிக்கல்லாக, லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில், டெளன்டவுன் ரயில் பாதையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை ‘ஆலி’ எனும் இயந்திர மனிதன் நிலப் போக்குவரத்து ஆணையத்தால் சோதிக்கப்பட்டது. 

1.27 மீட்டர் உயரமுள்ள இயந்திர மனிதனைத் தட்டியெழுப்ப ‘ஹாய் ஆலி’ எனச் சொல்லவேண்டும். ஓர் இடத்திற்குச் செல்ல வழி கேட்டால் வழியைச் சொன்னதுடன், “உங்களை அங்கு அழைத்துச் செல்லவா?” என்று பணிவாகக் கேட்டு, வெளியேறும் வழிக்கு மின்படிகள்வரை அது அழைத்தும் சென்றது. 

பயணிகளுக்கு ‘ஆலி’ பிடித்திருந்ததா? பயணச் சேவை அதிகாரிகளுக்கு ஈடுகொடுத்து இயந்திர மனிதனால் சேவை வழங்கமுடிகிறதா? இதைக் கண்டறிய தமிழ் முரசு பயணிகளின் கருத்துகளை நாடியது.

சிறுவர்களைக் கவரும் இயந்திர மனிதனால் மனிதத் தொடர்புகள் குறையுமா?

‘ஆலி’யைக் காண்பதற்கென, தம் இரு மகன்களுடன் செங்காங்கிலிருந்து லிட்டில் இந்தியா சென்றிருந்தார் திருவாட்டி ஷமீம். இரட்டையரான மகன்கள் முஹைமின், முஹாபிஸ் இருவரும் ‘ஆலி’யிடம் கேள்விகள் கேட்டு மகிழ்ந்தனர். “டெளன்டவுன் ரயில் பாதையில் எத்தனை நிலையங்கள் உள்ளன?,” போன்ற கேள்விகளைக் கேட்டபோது ‘ஆலி’ பதிலளித்தது. தற்போது ‘ஆலி’ ஆங்கிலத்தில்தான் உரையாடுகிறது.

“இயந்திர மனிதன் சிறுவர்களைக் கவர்கிறது. இன்றைய காலகட்டத்தில் அது கட்டாயமாகிவிட்டது. குழந்தை பருவத்திலேயே செயற்கை நுண்ணறிவு சிறுவர்களை நோக்கிச் செல்வதால், மனிதத் தொடர்புகள் குறைந்துவருகின்றன,” என்றார் திருவாட்டி ஷமீம். ஆனால், வழி தெரியாதவர்களுக்கு இயந்திர மனிதன் பயனுள்ளதாக இருப்பதாக அவர் கூறினார்.

“அது கேள்விகளுக்குப் பதிலளித்தது, மின்படிகள்வரை அழைத்துச் செல்லும் விதம் மிக அழகாக இருந்தன. ‘ஆலி’ நடக்கும்போது இரண்டு மீட்டர் தள்ளி நிற்கும்படி பயணிகளை எச்சரிக்கக்கூடச் செய்கிறது,” என்றார் அவர்.

சிறுவர்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்குமே அதிகப் பயன்

சிறுவர்களுக்கான செப்டம்பர் விடுமுறையின்போது ‘ஆலி’யைச் சோதித்தது நல்ல யோசனை என்றார் திருவாட்டி ஸ்ரீவித்யா.

“’ஆலி’ சிறுவர்களுக்கு நல்ல கற்றல் வாய்ப்பாக அமைகிறது; சுற்றுப்பயணிகளுக்கும் சிங்கப்பூர் எந்த அளவு முன்னேறியுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆனால், அதைத் தாண்டி பொதுமக்களுக்கு அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது கேள்விக்குறிதான்,” என்றார் அவர்.

“தற்போது அனைவரும் ‘கூகல் மேப்ஸ்’ வைத்தே பாதைகளை அறிகின்றனர். சிங்கப்பூரில் முதியோருக்குக்கூட கைத்தொலைபேசி பயன்படுத்துவதற்கான அடிப்படைப் பயிற்சி வழங்கப்படுகிறது. இயந்திர மனிதனை அணுகவும் முதியோர் தயங்குவார்கள். நிலைய அதிகாரிகளிடம் உதவி நாடுபவர்களே வெகு குறைவு. மேலும், அதற்கு நாம் பேசும் ஆங்கிலம் எந்த அளவு புரியும் எனத் தெரியாது,” என்றார் திருவாட்டி ஸ்ரீவித்யா.

முன்பு பத்து ஆண்டுகள் உணவகம் நடத்திவந்த திருவாட்டி ஸ்ரீவித்யா, “உணவகங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தமுடியும்; அந்த வரம்பு இயந்திர மனிதனுக்கு இல்லை. அதனால், அத்தகைய துறைகளில் இயந்திர மனிதன் பலனளிக்கின்றது,” என்றார்.

‘மனிதனுக்கு ஈடாகாது’

மனிதன் வழங்கும் சேவைத் தரத்தை இயந்திர மனிதனால் என்றுமே எட்டமுடியாது என ஆணித்தரமாகக் கூறினார் டெளன்டவுன் ரயில் பாதையில் பயணிகளுக்கு உதவும் அதிகாரியாக ஓராண்டு பகுதிநேரமாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு தேவா, 70. 

“மக்களிடம் நாங்கள் சிரித்துப் பேசுவோம். ஓராண்டு பணியாற்றியதில் எனக்கு எத்தனையோ நண்பர்கள் கிடைத்தனர். ஒரு நாள் விடுமுறை எடுத்தால், “நேற்று உங்களைப் பார்க்கவில்லையே,” என மக்கள் கேட்பார்கள். அப்படி இயந்திர மனிதனிடம் கேட்கமுடியுமா?

“சில நேரம் தகராறுகள் ஏற்படும்போது தீர்த்துவைத்திருக்கிறேன். வயதானவரையும் பார்வையற்றவர்களையும் கர்ப்பிணி மாதர்களையும் ரயிலுக்குள் அழைத்துச் சென்று அவர்களுக்கு இருக்கை தருமாறு சொல்லியிருக்கிறேன். ரயிலில் ஒரு பெண் மயங்கினார். அவருக்கு அவசர முதலுதவி வழங்கினேன். இயந்திர மனிதனால் அதைச் செய்யமுடியுமா?” எனக் கேட்டார் திரு தேவா.

எனினும், இயந்திர மனிதனுக்கு விடுமுறை, மருத்துவ விடுப்பு போன்றவை தேவைப்படாததால் ஊழியரணி நிர்வாகம் எளிதாகக்கூடும்; ஆட்குறைப்பும் நேரிடலாம் என்றார் அவர். தன்னைப் போன்ற முதியவர்களுக்கு ரயில் நிலையத்தில் பகுதிநேரமாகப் பணியாற்றும் வாய்ப்புகளும் குறைந்துவிடும் என அவர் கருதுகிறார்.

நான்கு மணிநேரம் நின்று மக்களுக்கு உதவுவதிலுள்ள சிரமங்களையும் வலியுறுத்திய திரு தேவா, எதிர்காலத்தில் இத்தகைய பணிகளுக்கு இளையர்களை ஈர்ப்பதும் கடினம் என்றார். 

“இயந்திர மனிதனை வேலைக்கு வைப்பதில் எனக்கு உடன்பாடு உள்ளதா எனக் கேட்டால் 50-50 என்றுதான் சொல்வேன்,” என்றார் திரு தேவா.

குறிப்புச் சொற்கள்
இயந்திர மனிதன்ரயில் நிலையம்இரட்டையர்