மூத்தோரைப் பராமரிக்கும் வாடிக்கையாளர்க்குச் சேவை வழங்கும் வேலைக்குத் தயாராவோர் இனி எப்போதும் உற்சாகமாய் சோர்வடையாமல் ஒரே மாதிரியான மனநிலையில் இருக்கும் இயந்திர மனிதக் கருவியிடமிருந்து பயிற்சி பெறலாம்.
வழக்கமாக, மிகக் கடினமான உரையாடல்களைப் பழகுவதற்கு உரிய நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டும். அவர்கள் சோர்வடையவோ தங்கள் நிலையிலிருந்து மாறவோ வாய்ப்புண்டு. காலப்போக்கில் இதற்கான செலவும் அதிகரிக்கும்.
வரும் ஆண்டின் முதல் காலாண்டில், இத்தகைய இயந்திரங்களின் உதவியுடன், தேவைக்கேற்பப் பலமுறை ஒத்திகை பார்க்கலாம். நிபுணர்களுக்கான கட்டணம் என்பது பொதுவாக, ஒரு நாளைக்குக் குறைந்தது 500 வெள்ளியாக இருக்கிறது. இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தினால் அதைச் செலுத்தத் தேவையில்லை. இவை, மனிதர்களைப் போலவே, முகம், கைகள் மட்டுமின்றி மேற்பாகத்தையும் உள்ளடக்கிய இயந்திரங்கள்.
இவை, மருத்துவத் தர சிலிக்கான் முகத்திற்கு உட்புறம் இருக்கும் நுண்ணிய மோட்டாரால் இயங்குகின்றன. இது கடினமான நெகிழி முகங்களைக் கொண்ட வழக்கமான பயிற்சி எந்திரனை போன்றதன்று.
‘ஃபேசிபாட்’ (FaceyBot) எனப்படும் இத்தத்ரூபமான இயந்திரங்களைச் சீனாவின் ‘ஷென்சென் சியாவோகுவான் டெக்னாலஜி கல்ச்சர்’ நிறுவனத்துடன் இணைந்து உள்ளூர்ப் பயிற்சி ஆலோசனை நிறுவனமான ‘ஸ்ட்ரெய்ட்ஸ் இன்டராக்டிவ்’ சிங்கப்பூருக்குக் கொண்டுவருகிறது.
கவலை, கோபம், வியப்பு உள்ளிட்ட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட முக்கிய முகபாவனைகளையும் மெல்லிய புன்னகை, உயர்த்திய புருவம் போன்ற நூற்றுக்கணக்கான நுட்பமான பாவனைகளையும் இதனால் வெளிப்படுத்த முடியும். சீனாவில் காட்சிக்கு வைக்கப்பட்ட இத்தொழில்நுட்பம் வணிக ரீதியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கண் நிழற்படக் கருவிகள், மார்பு உணர்கருவிகள் கொண்ட ‘யுபிடெக்’ உட்பட பல இயந்திரங்கள் சந்தையில் உள்ளன. ஆயினும் தத்ரூபமான, இயல்பான முக அசைவுகளுக்காகவும் ஷென்சென் செயற்கை நுண்ணறிவுக் கண்காட்சியில் புத்தாக்க விருது வென்றதாலும் ஷென்சென் சியாவோகுவானை ஸ்ட்ரெய்ட்ஸ் இன்டராக்டிவ் தேர்ந்தெடுத்தது.
செயற்கை நுண்ணறிவுச் செயலி வடிவமைப்பு, கட்டமைப்பு ஒருங்கிணைப்புடன் 10,000 வெள்ளியிலிருந்து தொடங்கும் இவற்றின் விலை, ‘கபாபரா’ மென்பொருள் மூலம் சினமடைந்த வாடிக்கையாளர் அல்லது குழப்பமடைந்த நோயாளி போலவும் செயல்படும். தகவல் அணுகல் வரம்பு, உரையாடல் பதிவு போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளும் இதில் உள்ளன.
“மனித நிபுணர்கள் சோர்வடைவதால் பயிற்சி அனுபவம் மாறுபடும்; ஆனால் இந்த இயந்திரங்கள் சீராகச் செயல்படும். ஒரு கணினித் திரையால் உருவாக்க முடியாத உண்மையான உணர்ச்சியை நேரில் இருக்கும் முகம் உருவாக்கும். நேரில் இருப்பது வார்த்தைகளை மட்டுமின்றி உடல்மொழியையும் பயிற்றுவிக்கும்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் இன்டராக்டிவ் நிறுவனர் கெவின் ஷெப்பர்ட்சன் கூறினார்.
குழு விவாதங்களுக்கு நிர்வாகிகளைத் தயார்ப்படுத்த இது உதவுமா என்றும் ஆராயப்படுகிறது. சக ஊழியர்களுக்குப் பதிலாக, நீண்ட நேரம் பேசுபவராகவோ சந்தேகம் கொள்பவராகவோ இவற்றை நிரலாக்கம் செய்ய முடியும்.
தாதியர் பயிற்சியில் வலி உணர்த்தும் முகச்சுளிப்பு போன்ற வாய்மொழியிலாக் குறிப்புகளைப் பழக இது உதவும். வழக்கமான தூய்மைப்படுத்தலைத் தாங்கி, உள்ளூர் மொழிகளிலும் உச்சரிப்புகளிலும் நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மின்னியல், மின்னணுப் பொறியியல் பள்ளியின் பேராசிரியர் ஜெங் யுவான்ஜின் கூறினார்.
