தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பறவைகளுக்கு இரையைக் கொண்டு செல்ல ‘ரோபோ’

2 mins read
e69dc1c1-93e6-4e8e-90f2-5e2449c0aaa5
உணவு விநியோக ரோபோவுடன் சேர்த்து 2025 முதலாம் காலாண்டில் மூன்று ரோபோக்கள் பறவைப் பூங்காவில் அறிமுகம் செய்யப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘பேர்ட் பாரடைஸ்’ (Bird Paradise) பறவைப் பூங்காவில் உள்ள பறவைகளுக்குத் தேவையான இரையைக் கொண்டு செல்ல ரோபோ எனப்படும் இயந்திர மனிதனைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஓட்டுநரில்லா தானியக்க வாகனம் ரோபோவாகச் செயல்பட்டு இரையை பறவைக் கூண்டுகளுக்குச் சென்று வழங்கும். மேடு, பள்ளம் என எல்லாப் பாதைகளிலும் இயங்கக்கூடிய வாகனமாக அது இருக்கும்.

மண்டாய் வனவிலங்குப் பூங்காக்களில் ஏற்கெனவே கண்காணிப்புப் பணியில் இயந்திர மனிதனைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பாதுகாப்புக்கான சுற்றுக்காவலில் அது ஈடுபடுத்தப்படும்.

அது தவிர, பூங்காவின் வரவேற்புப் பகுதியிலும் இயந்திர மனிதச் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களிடம் பேசவும் பூங்கா பற்றிய தகவல்களை அளிக்கவும் அது பயன்படுத்தப்படும்.

அந்த ரோபோக்களோடு இனி உணவு விநியோக ரோபோவும் அங்கு இணைந்துகொள்ளும்.

இந்த மூன்று ரோபோக்களும் 2025 முதலாம் காலாண்டில் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

அதற்கான விவரங்களை விளக்கிச் சொல்ல மண்டாய் வனவிலங்குக் குழுமம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) செய்தியாளர்களை அழைத்தது.

தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து ரோபோக்களை செய்தியாளர்களுக்கு அந்தக் குழுமம் காண்பித்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்ட பேர்ட் பாரடைஸ், பறவைகளின் இயற்கை வாழ்விடங்களைப் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், 17 ஹெக்டர் நிலப்பரப்பில் நிறைந்திருக்கும் பறவைகளுக்கு உணவு விநியோகம் செய்ய பறவைக் காப்பாளர்களுக்கு அதிக நேரம் செலவாகிறது.

எனவே, நேரத்தை மிச்சப்படுத்தவும் பணிச்சுமையைக் குறைக்கவும் ரோபோவைப் பயன்படுத்தும் யோசனை பிறந்தது. அது தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது.

பூங்காவுக்கு வெளிப்புறத்திலும் ரோபோக்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய ஆறு மாத சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையமும் மண்டாய் வனவிலங்குக் குழுமமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்