பொங்கோலில் உணவு விநியோகம், பாதுகாப்புப் பணிகளில் இயந்திர மனிதக் கருவிகள்

பொங்கோலில் உணவு விநியோகம், பாதுகாப்புப் பணிகளில் இயந்திர மனிதக் கருவிகள்

2 mins read
முன்னோடித் திட்டத்தில் கிராப், செர்ட்டிஸ் உள்ளிட்ட எட்டு முக்கிய நிறுவனங்கள் பங்கெடுக்கும்
7bde739f-b17d-4ea3-8c99-17c20eaf0e67
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் 2026ஆம் ஆண்டின் இறுதியில் பேரளவிலான தானியங்கி இயந்திர மனிதக் கருவிகளின் சோதனைகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. - படம்: தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் முதன்மையான அறிவார்ந்த எந்திரனியல் (ரோபோட்டிக்ஸ்) சோதனைத் தளமான பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் கண்காணிப்பு, உணவு விநியோகம், சுத்திகரிப்பு நடவடிக்கைகளைத் தானியக்கமாக்க இயந்திர மனிதக் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ புதன்கிழமை (மே 20) அறிவித்துள்ளார்.

அரசாங்கம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (எஸ்ஐடி) ஆகியவற்றுடன் இணைந்து கிராப், செர்ட்டிஸ் உள்ளிட்ட எட்டு முக்கிய நிறுவனங்கள் அந்த முன்னோடித் திட்டத்தில் பங்கெடுக்கும்

செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சோதிக்கவும் இயந்திர மனிதர்களைப் பெருமளவில் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்கவும் பேரளவிலான சோதனைகள் 2026ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

“போதிய சேவைகளைப் பெறாத பகுதிகளில்,சேவை வழங்கலை மேம்படுத்த இயந்திர மனிதக் கருவிகள் உதவும்,” என்ற அமைச்சர், முன்னிலை செயற்கை நுண்ணறிவுச் சோதனைத் தளமாகப் பொங்கோல் மின்னிலக்க வட்டாரம் பாதுகாப்பாக இயங்குவதை உறுதிசெய்ய ஒருங்கிணைந்த தரவுத் தளமும் சோதனைச் சூழல்களும் உருவாக்கப்படும் என்றார்.

ஆறாவது ‘ஏ‌ஷியா டெக் எக்ஸ்’ மாநாட்டில் பேசிய அமைச்சர், பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தைப் பயன்படுத்தும் பங்காளிகள் அதிகரிப்பது எந்திரனியலின் ஏற்பை மேம்படுத்தும் என்றார். மே 20 முதல் 22 வரை நடக்கும் மாநாட்டில் உலகளாவிய தொழில்நுட்ப வல்லுநர்களும் கொள்கை வகுப்பாளர்களும் பங்கேற்கின்றனர்.

பொதுச் சாலைகள், அலுவலக வளாகங்கள், பல்கலைக்கழக வளாகங்களில் தானியங்கி இயந்திர மனிதக் கருவிகள் சோதிக்கப்படவுள்ளன. நிஜ உலகச் சூழலில் ஏஐ அமைப்புகளை மேம்படுத்த இந்தத் திட்டம் உதவும் என தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ), ஜேடிசி, எஸ்ஐடி ஆகியவை தெரிவித்துள்ளன.

வழக்கமான பணிகளில் இயந்திர மனிதக் கருவிகள் ஈடுபடுத்துவதன் மூலம், மேற்பார்வை, நிர்வாகம் போன்ற உயர் மதிப்புமிக்க பணிகளுக்கு ஊழியர்கள் மாற வழிவகுக்கும்.

இந்த மேம்பாட்டை விரைவுபடுத்த, டிஎச்எல், குவிக்போட் உள்ளிட்ட பங்குபெறும் நிறுவனங்கள் தனித்தனி அனுமதியின்றிப் பொதுப் பாதைகளில் பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள நடமாட்டச் சாதனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பு விலக்கு அளிக்கப்படும்.

சோதனைகள் குறித்த கூடுதல் விவரங்கள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.

குறிப்புச் சொற்கள்